தொடரும் கனிம வளக் கொள்ளை: லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்
லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்.
கடையத்தில் ராட்சத லாரிகளால் மோசமான காட்சியளிக்கும் சாலை - நடவடிக்கை எடுக்காததால் லாரியை சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டம் கடையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான கல்குவாரிகள் மற்றும் தனியார் கிரஷர்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து 10 முதல் 20 வீல் வரை கொண்ட ராட்சத லாரிகள் மூலம் கனிம வளங்களை ஏற்றி கேரளாவிற்கு கொண்டு செல்கின்றனர். இவ்வகையான லாரிகள் செல்வதால் கடையத்தில் இருந்து ஆலங்குளம், முக்கூடல் உள்பட சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. இதனால் பல்வேறு தரப்பினர் உயர் அதிகாரிகளை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
இந்த நிலையில் அதிக எடையுள்ள கனிம வளங்களை லாரிகளை எடுத்து செல்வதால் கீழக்கடையம் ரயில்வே சாலையும் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால் பள்ளி வாகனங்கள், இருசக்கர வாகனங்களில் செல்வோர் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் வாகனங்கள் செல்வதால் சாலையில் புழுதிகள் பறந்து அப்பகுதியினரும் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியினர் கீழக்கடையம் பஞ்சாயத்து தலைவர் பூமிநாத் தலைமையில் இன்று காலை அவ்வழியாக சென்ற லாரியை சிறைபிடித்து முற்றுகை பேராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கடையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு நிலவியது. ஏற்கனவே இந்த சாலையில் கீழக்கடையம் பஞ்சாயத்து தலைவர் ராட்சத லாரிகள் செல்லாதவாறு பள்ளம் தோண்டி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu