கால்வாயை சீரமைத்துத் தர அதிகாரிகள் காலில் விழுந்த விவசாயிகள்..!

அதிகாரிகள் காலில் விழுந்து கால்வாயை சீரமைத்துத் தர விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
தென்காசி மாவட்டம் கடையம் குட்டிகுளத்திலிருந்து பாசனத்திற்கு செல்லும் கால்வாய் சீரமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. ஆனால் பலமுறை விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் கால்வாய் சீரமைக்கப்படவில்லை.
கால்வாயை சீரமைக்க கோரி 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடையம் ஒன்றிய கவுன்சிலர் மாரி குமார் தலைமையில் பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு வந்து கால்வாயை சீரமைக்க கோரி கோசமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்பு வாசலில் அமர்ந்து கால்வாய் சீரமைக்க வேண்டும் என கோசமிட்டபடி உட்கார்ந்திருந்தனர்.
பொதுப்பணித்துறை உதவி செயற் பொறியாளர் முருகேசன் கடையம் காவல் நிலைய ஆய்வாளர் விஜயகுமார்,வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் (பொறுப்பு) கருப்பசாமி ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் . நீர்ப்பாசன கமிட்டி தேர்தல் நடந்து 15 ஆண்டுகள் ஆகின்றன. நீர்ப்பாசனக் கமிட்டியில் நிதி உள்ளது. அந்த நிதியை எடுக்க வேண்டும் என்றால் தேர்தல் நடத்த வேண்டும்.
தற்காலிகமாக கால்வாய் சரி செய்து தரப்படும். தேர்தலுக்குப் பின்னர் நிரந்தரமாக கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உதவி செயற் பொறியாளர் முருகேசன், வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் (பொறுப்பு) கருப்பசாமி ஆகியோர் உறுதியளித்தார். அந்த நேரத்தில் .கவுன்சிலர் மாரிகுமார் மற்றும் இரண்டு விவசாயிகள் திடீரென அதிகாரிகள் காலில் விழுந்து, எங்களுக்கு கால்வாய் சீரமைக்கப்படணும். அதனால் எப்படியாவது எங்கள் வாழ்க்கை செழிக்க கால்வாயை சீரமைத்து தாருங்கள்'என்று கோரிக்கை விடுத்தனர்.
இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. விவசாயிகளோடு கிழக்கடையம் பஞ்சாயத்து தலைவர் பூமிநாத் , கடையம் ஒன்றிய கவுன்சிலர் மாரி குமார், சமூக ஆர்வலர் கஜேந்திரன், தேவேந்திரகுல வேளாளர் சங்க கூட்டமைப்பு தலைவர் பாரதி நகர் சங்கர், ரயில்வே முருகன், பட்டதாரி விவசாயி தியாகு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu