20 நாட்களாக முகாமிட்டுள்ள யானைக்கூட்டம்: தென்னை, வாழை சேதம்

20 நாட்களாக முகாமிட்டுள்ள யானைக்கூட்டம்: தென்னை, வாழை சேதம்
X

கடையம் வனச்சரகத்திற்கு உபட்ட கடையம், கடவக்காடு, திரவியநகர், மத்தளம்பாறை பகுதிகளில் முகாமிட்டுள்ள யானைகள். 

கடையம் பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள், தென்னை, வாழை மரங்களைப் பிடுங்கி சேதப்படுத்தின.

தென்காசி மாவட்டம், கடையம் வனச்சரகத்திற்கு உள்பட்ட கடையம், கடவக்காடு, திரவியநகர், மத்தளம்பாறை பகுதிகளில் கடந்த 20 நாள்களாக யானைக் கூட்டம் முகாமிட்டு தோட்டங்களில் பயிரிட்டுள்ள தென்னை, வாழை மரங்களைப் பிடுங்கி அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன.

தோரணமலை, கடவக்காடு, திரவியநகர், மத்தளம்பாறை ஆகிய மலையடிவார கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாய நிலங்கள் உள்ளன. இவற்றில் நெல், தென்னை, வாழை, மா, பலா உள்ளிட்டவை பயிரிட்டு வளர்த்து வருகின்றனர். சுமார் 8 யானைகள் அடங்கிய கூட்டம், அந்தப் பகுதியில் முகாமிட்டுள்ளன.

சில நாள்களுக்கு முன் ஆரியங்காவூர் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரது தோட்டத்தில் நுழைந்த யானைக்கூட்டம் 20 தென்னை மற்றும் 50 வாழை மரங்களை பிடுங்கி நாசப்படுத்தின. இது குறித்து வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்ததற்கு வனச்சரக அலுவலகத்தில் மனுவாக எழுதிக் கொடுக்கச் சொல்லியுள்ளனர்.

நேற்றும் அவரது தோட்டத்தில் நுழைந்த யானைக்கூட்டம், மேலும் 10க்கும் மேற்பட்ட தென்னை மற்றும் 30க்கும் மேற்பட்ட வாழை மரங்களையும் அருகிலுள்ள தோட்டத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட தென்னை மரங்களையும் பிடுங்கி சேதப்படுத்தின. கடையம் வனச்சரகத்தில் மனு கொடுத்ததை அடுத்து, வேட்டைத் தடுப்புக் காவலர்கள் ரோந்துப்பணியில் ஈடுபட்டு, வெடி வெடித்து யானைகளை கலைத்தனர். ஆனால், யானைகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் மலையடிவாரத்திலேயே வேறு இடத்திற்குச் சென்றன.

வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, யானை சரணாலயம் அமைக்க உத்தரவிட்டுள்ள நிலையில் யானைகள் நடமாட்டத்தை அறிந்து அவை வனப்பகுதிக்குள் வராமல் இருக்க திட்ட அறிக்கை தயார் செய்து அனுப்பப்பட்டுள்ளது. உரிய அனுமதி கிடைத்ததும் யானைகள் வனப்பகுதிக்குள் இருந்து வெளியேறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!