மூன்று பேரை கடித்து குதறிய கரடி. மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது

மூன்று பேரை கடித்து குதறிய கரடி. மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது
X

தென்காசி அருகே மூவரை தாக்கிய கரடி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது

Tenkasi News -கடையம் அருகே 3 பேரை கடித்துக் குதறிய 8 வயது பெண் கரடியை காவல்துறை உதவியுடன் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்

Tenkasi News -தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி விவசாய நிலங்கள், கிராமங்கள் உள்ளன. வனப்பகுதிகளில் இருந்து விலங்குகள் அடிக்கடி வெளியே வருவதுண்டு. அப்படி வரும் விலங்குகளால் விவசாயப் பயிர்கள் சேதமடைந்து பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடையம் அருகே கிராமத்துக்குள் புகுந்த கரடி 3 பேரை கடித்து காயப்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள கருத்தலிங்கபுரம் என்ற பகுதியை சேர்ந்த மசாலா வியாபாரி வைகுண்டமணி என்பவர் பெத்தான் பிள்ளை குடியிருப்பு என்ற கிராமத்திற்கு இரு சக்கர வாகனத்தில் வியாபாரத்திற்கு சென்றபோது சாலையின் குறுக்கே திடீரென வந்த ஒற்றை கரடி, அவரது இருசக்கர வாகனத்தை மறித்து கீழே தள்ளி கடித்து குதறியது.

தகவல் அறிந்த ஊர் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு சென்று அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட போது, பெத்தான்பிள்ளை குடியிருப்பத்தை சேர்ந்த பச்சாத்து மகன்கள் நாகேந்திரன் மற்றும் சைலப்பன் ஆகியோரையும் கரடி கடித்து குதறியது. இதில் மூன்று பேருக்கும் தலை, முகம்,கன்னம், கண் ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்தனர். மேலும் பொதுமக்களை கரடி துரத்தியதில் பலர் கிழே விழுந்து காயமடைந்தனர்.

தொடர்ந்து காயமடைந்தவர்கள் அம்பை அரசு மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதனையடுத்து ஆட்கொல்லி கரடியை சுட்டு பிடிக்க வேண்டும் பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிவசைலத்தில் உள்ள கடையம் வனச்சரக அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகையிட்டு சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக மறியல் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். கரடியை பிடிக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்தனர்.

தொடர்ந்து கரடியை கூண்டு வைத்து பிடிக்கும் முயற்சி எடுக்கப்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தொடர்ந்து ஆலங்குளம் டி.எஸ்.பி. பொன்னரசு, கடையம் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் உதவியுடன் நெல்லை கால்நடை மருத்துவ கல்லூரி பேராசிரியர் முத்து கிருஷ்ணன் தலைமையிலான மருத்துவ குழுவினர் அந்த கரடிக்கு 2 மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், 8 வயது மதிக்கத்தக்க இந்த பெண் கரடி, அம்பை அருகே மேற்க்குத்தொடர்ச்சி மலையிலுள்ள முண்டந்துறை பகுதிக்கு கொண்டு செல்ல இருப்பதாக தெரிவித்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி