கடையம் அருகே கரடி தாக்கியதில் வியாபாரி உள்ளிட்ட 3 பேர் படுகாயம்..

கடையம் அருகே கரடி தாக்கியதில் வியாபாரி உள்ளிட்ட 3 பேர் படுகாயம்..
X

கரடி தாக்கியதில் காயமடைந்த வியாபாரி வைகுண்டமணி.

தென்காசி மாவட்டம், கடையம் அருகே கரடி தாக்கியதில் வியாபாரி உள்ளிட்ட 3 பேர் படுகாயமடைந்தனர். தப்பியோடிய கரடியை கூண்டு வைத்து பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கன்னியாகுமரியில் தொடங்கி மகாராஷ்டிரா மாநிலம் வரை நீளும் மேற்கு தொடர்ச்சி மலையில், சிங்கம், புலி, கரடி, யானை, மான், கடா மான், சிறுத்தை உள்ளிட்ட மிருகங்கள் உள்ளன. இதுதவிர, மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணக்கூடிய அரிய வகையான சிங்கவால் குரங்கு, ராஜநாகம், சாம்பல் நிற அணில் என அபூர்வமான எண்ணற்ற விலங்குகள் இங்கு வாழ்கின்றன.

மலைப்பகுதியில் வாழும் விலங்குகள் அவ்வப்போது மலை அடிவாரப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களையும் சேதப்படுத்தியும், விவசாயிகளை தாக்கியும் செல்வது வாடிக்கையாகி வருகிறது. சில இடங்களில் யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து அனைத்து பயிர்களையும் துவம்சம் செய்து விடுகின்றன.

அதுமட்டுமின்றி, சில நேரங்களில் கரடி, புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் மலையடிவார கிராத்துக்குள் புகுந்தும், மலையடிவார பகுதியில் நடமாடும் மனிதர்களை தாக்குவதும் தொடர்ந்து வருகின்றன.

இந்நிலையில், தென்காசி மாவட்டம், கடையம் அருகே மசாலா வியாபாரி உள்பட 3 பேரை கரடி கரடித்துக் குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், கடையம் பகுதி மக்கள் ஒருவித அச்சத்தில் உள்ளனர். தென்காசி மாவட்டம், கடையம் பகுதியை சேர்ந்த வைகுண்டமணி மசாலா வியாபாரம் செய்து வருகிறார்.

இவர், வழக்கம்போல, இன்று காலை கடையம் அருகேயுள்ள சிவசைலத்தில் இருந்து பெத்தான்பிள்ளை குடியிருப்பு என்ற கிராமத்திற்கு தனது இரு சக்கர வாகனத்தில் மசாலா பொருள்களுடன் வியாபாரத்திற்கு சென்று கொண்டிருந்தாராாம். அப்பொழுது சாலையின் குறுக்கே திடீரென வந்த கரடி, அவரது இருசக்கர வாகனத்தை மறித்து கீழே தள்ளி உள்ளது. வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்த வியாபாரி வைகுண்டமணியை கரடி கடிக்கத் தொடங்கியுள்ளது.

வைகுண்டமணியின் கூச்சல் சத்தம் கேட்டு அந்தப் பகுதிக்குச் சென்ற பொதுமக்களில் சிலர் அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், காப்பாற்ற முயன்ற போது பெத்தான்பிள்ளை குடியிருப்பத்தை சேர்ந்த நாகேந்திரன் மற்றும் சைலப்பன் ஆகியோரையும் கரடி கடித்து குதறிவிட்டு அங்கிருந்து கரடி தப்பியோடியது.

கரடி கடித்ததில் மூன்று பேருக்கும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். தகவல் அறிந்த கடையம் வனச்சரகர் கருணாமூர்த்தி மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று காயம் பட்டவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அவர்கள் மூவரும் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து பெத்தான் பிள்ளை குடியிருப்பு பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் வனத்துறை கண்டித்து சிவசைலம் - கடையம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய வனத்துறையினர் கரடியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக உறுதியளித்தனர். இதனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா