வெங்கடம்பட்டி இளம் ஊராட்சி தலைவர் சாருகலாவுக்கு பாராட்டு விழா
சுதந்திர தின அமிர்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட இளம் ஊராட்சி தலைவர் சாருகலாவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கடம்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் சாருகலா டெல்லியில் நடைபெற்ற 75 -வது சுதந்திர தின அமிர்த பெருவிழாவில் கலந்து கொண்டு வந்ததை சிறப்பிக்கும் வண்ணம் கடையம் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று வெங்கடாம்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
இளம் வயதிலே படித்து ஊராட்சி தலைவரான சாருகலா அவர்களை பாராட்டி நடந்த இந்த கூட்டத்தில் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் பிரான்ஸிஸ் மகாராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
ஊராட்சி தலைவர் கூட்டமைப்பு தலைவர் டி.கே. பாண்டியன் தலைமையில் கடையம் ஒன்றியத்திற்குட்பட்ட 23 ஊராட்சி தலைவர்கள் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் அவருக்கு குத்துவிளக்கு பரிசாக வழங்கப்பட்டது.
தொடர்ந்து டெல்லி சென்று வந்த ஊராட்சி தலைவர் சாருகலா பேசுகையில், நான் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது அங்கு அனைத்து மாநிலத்தில் இருந்தும் தேர்வானவர்கள் வந்திருந்தனர். கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இணையவழி ஆப் மூலமாக மக்களுக்கான பல்வேறு கணக்கெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.
ஊராட்சிகளின் உதவி இயக்குனர் பேசுகையில், சாருகலா இன்னும் பல்வேறு விருதுகளை வாங்குவார், ஊராட்சியை சுகாதாரமாக வைக்கவேண்டும், குடிநீர், தெருவிளக்கு, சுகாதாரம் போன்ற அடிப்படைத் தேவைகள் தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும்,ஊராட்சிக்கான நிதி அதிகமாக உள்ளது ,அதனை நாம் முறையாக பயன்படுத்த வேண்டும் ,வேலைகளை விரைவாக முடிக்க வேண்டும் என கூறினார்.
இவ்விழாவில் கடையம் ஒன்றிய கீழகடையம், அணைந்தபெருமாள்நாடனூர், ரவணசமுத்திரம், முதலியார்பட்டி உள்ளிட்ட 23 ஊராட்சி தலைவர்களும் கலந்துகொண்டனர். இதனையடுத்து ஊராட்சி தலைவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu