பனைகள் அழிக்கப்படும் அபாயம்: கடையம் அருகே காற்றில் பறக்கும் அரசின் உத்தரவு
கடையம் பகுதிகளில் பனைகளை வெட்டி லாரிகளில் ஏற்றிச் செல்லும் காட்சி.
நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு தமிழக பட்ஜெட்டில் பனைகளை வெட்ட தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தவிர்க்க முடியாத காரணத்திற்காக மட்டும் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்ற பின்னரே பனைகளை வெட்டும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் கடையம் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் நூற்றுக்கணக்கான செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. வெளிமாநில தொழிலாளர்களை பணியமர்த்தி இரவு பகல் பாராமல் சூளைகளை இயக்கி வருகின்றனர். இந்த செங்கல் சூளைகளுக்கு முக்கிய எரிபொருளாக பனைகளை வெட்டி பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது பட்ஜெட்டில் பனைகளை வெட்ட தடை பிறப்பித்த பின்னரும் தாறுமாறாக பனைகளை வெட்டி எரிபொருளுக்கு பயன்படுத்துகின்றனர். வெளி மாவட்டங்களில் இருந்தும் இரவோடு இரவாக லாரிகளில் பனை மரங்கள் வெட்டி எடுத்து வரப்படுகிறது. வருவாய்த்துறையினரோ, காவல்துறையோ, வனத்துறையோ இதனை கண்டு கொள்வதில்லை. இது குறித்து பல முறை புகார்கள் அளித்தும் நிரந்தர தீர்வோ நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை.
அரசே தடையுத்தரவு பிறப்பித்த பின்னரும் வாகன சோதனை நடத்தியோ, செங்கல்சூளைகளில் நேரடி ஆய்வு செய்தோ நடவடிக்கை எடுப்பதை விட்டு விட்டு எப்போது பார்த்தாலும் புகார்தாரர்களை எதிர்நோக்கி காத்திருப்பதும், புகார்களை தங்களுக்கு வருமான சாதகமாக மாற்றிக் கொள்வதுமாக தங்களது கடமைகளை தட்டிக் கழிக்கின்றனர். தமிழகத்தின் தேசிய மரமான பனைகளை வெட்டுவதையும், லாரிகளில் ஏற்றிச் செல்வதையும் தடுக்க வேண்டியது என்பது அரசு ஊதியம் பெறும் வருவாய், காவல்துறை மற்றும் வனத்துறையினரின் கடமையும் உணர்வுமாகும்.
எனவே தென்காசி மாவட்டத்தில், குறிப்பாக சூளைகள் நிறைந்த கடையம் சுற்றுவட்டார பகுதிகளில் பனைகளை வெட்டுவதை தடுக்கவும், லாரிகளில் ஏற்றிச்செல்வதை தடுத்து சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளவும் மாவட்ட ஆட்சியர் துரித கதியில் ஏற்பாடு செய்து தேசிய சின்ன அவமதிப்பை தடுக்க வேண்டும் என பனைவாழ்வியல் இயக்கம் தலைவர் ஜான் பீட்டர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu