கடையம் யூனியன் பி.டி.ஓ.வுக்கு "டோஸ்" விட்ட உயர் அதிகாரி

கடையம் யூனியன் பி.டி.ஓ.வுக்கு டோஸ் விட்ட உயர் அதிகாரி
X

மாதிரி படம்

அரசின் நலத்திட்ட பணிகளை நிறைவேற்றுவதில் சுணக்கமாக இருந்து வருவதாக கடையம் யூனியன் பி.டி.ஓ.விற்கு "டோஸ்" விட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநர்

அரசின் நலத்திட்ட பணிகளை நிறைவேற்றுவதில் ஆரம்பத்தில் இருந்தே சுணக்கமாக இருந்து வருவதாக கடையம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் திலகராஜின் நிர்வாகத் திறமையின்மையை அறிந்து தென்காசி மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கடுமையாக டோஸ் விட்ட சம்பவம் நடந்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் கடையம் ஒன்றியம் மிகவும் பரந்து விரிந்த பரப்பளவைக் கொண்டதும், 23 ஊராட்சிகளை உள்ளடக்கியதுமாக உள்ளது. விளைநிலங்களும், வேளாண் தொழில்களும் அதிகமுள்ள நிலையில் தாலுகா அந்தஸ்திற்கு கடையம் ஒன்றியத்தை உயர்த்த வேண்டும் என்ற குரல் பல ஆண்டுகளாகவே ஒலித்துக் கொண்டிருக்கிறது.

இந்த ஒன்றியத்தை நிர்வாகம் செய்ய வேண்டுமானால் தகுதியும் நிர்வாகத்திறமையும் வாய்ந்த அதிகாரிகளை பணியமர்த்த வேண்டும் என்பது அவசியமான ஒன்று. ஆனால் இதுபோன்ற எந்த அடிப்படை அளவுகளை பின்பற்றி கடையம் ஒன்றிய நிர்வாகத்திற்கு அதிகாரி நியமனம் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.

வாரிசு நியமன அடிப்படையில் பணியில் சேர்ந்து, தற்போது பணிமூப்பு என்ற அடிப்படையை மட்டும் வைத்துக் கொண்டு வட்டார வளர்ச்சி அலுவலராக பதவியுயர்வு பெற்றுள்ள கடையத்தை சொந்த ஊராக கொண்ட திலகராஜ் என்பவருக்கே கடையம் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிநியமனம் அளித்திருப்பது ஏற்கனவே சர்ச்சைக்குரிய விவகாரமாக இருந்த போதிலும், இவரது நிர்வாகத்திறமை என்பது கடையம் யூனியனின் வளர்ச்சியை பின்னோக்கி இழுப்பதாகவே இருப்பது வேதனைக்குரிய ஒன்று.

உள்ளாட்சி தேர்தல்களும் முடிவடைந்து மக்கள் பிரதிநிதிகளும் பதவியேற்றுவிட்ட நிலையிலும் யூனியன் கூட்டம் முழுமையாக நடைபெறாமல் போனதற்கும் இவரது செயல்பாடுகளே காரணமாகவும் கூறப்படுகிறது.

ஒன்றிய கவுன்சிலர்களை அலட்சியம் செய்வது, அலுவலகத்திற்கு கோரிக்கைகளுக்காக வரும் பொதுமக்களை சொந்த ஊர் மக்கள்தானே என்று ஏகத்துக்கும் உதாசீனப்படுத்துவது, மக்கள் நலப்பணிகளை நிறைவேற்றுவதில் அக்கறை செலுத்தாதது, ஊழல் குற்றச்சாட்டுக்கள் என அடுக்கடுக்காக இவர் மீது மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் சென்ற வண்ணம் உள்ளன.

இவரை பணியிட மாற்றம் செய்வதோடு, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடையம் ஒன்றிய திமுக கவுன்சிலர்கள் போர்க்கொடி தூக்கியிருப்பதோடு, மாவட்ட கலெக்டரையும் நேரில் சந்தித்து புகார் மனு அளித்துள்ளனர். பொதுமக்களும் இவர் மீது நடவடிக்கை கோரி மனுக்கள் அளித்து வருகின்றனர். இதன் காரணமாக மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனர் நேரில் கடையம் யூனியன் அலுவலகத்திற்கு வந்து ஆய்வு நடத்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் திலகராஜின் நிர்வாகத் திறமையின்மையை கண்டித்து "டோஸ்" விட்டு சென்றுள்ளார்.

விரைவில் கடையம் யூனியன் பிடிஓ திலகராஜ் பணியிடமாற்றம் செய்யப்பட்டு மாற்று அதிகாரி நியமிக்கப்படுவார் என யூனியன் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி