14 வயது மகனுக்கு மாற்று இருதய அறுவை சிகிச்சைக்காக போராடும் தொழிலாளி

14 வயது மகனுக்கு மாற்று இருதய அறுவை சிகிச்சைக்காக போராடும் தொழிலாளி
X

தர்மபுரமட ஊராட்சி மன்ற தலைவர் ரூஹான் ஜன்னத் சதாம் முருகன் இல்லத்திற்கு சென்று மாத்திரைகளை வழங்கினார்.

மருத்துவ செலவிற்கு பண வசதி இல்லாததால் தனது மகனின் உயிரை காப்பாற்ற தமிழக முதல்வருக்கு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள சம்பன்குளம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி முத்துலட்சுமி இவர்களுக்கு கடந்த 2005-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சரவணன் (வயது 14), சக்திவேல் (வயது 12) ஆகிய 2 மகன்களும் முத்துமாரி (வயது 8) என்ற ஒரு மகளும் உள்ளனர். முருகன் கூலி வேலை செய்து தனது வாழ்வாதாரத்தைநடத்தி வருகிறார்.

இந்நிலையில், மூத்த மகன் சரவணனுக்கு சிறு வயதிலிருந்து இருதயத்தில் ஓட்டை இருந்ததாகக் கூறி, கடந்த 2010 ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்தனர். தற்போது சரவணனுக்கு மாற்று இருதயம் பொறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மாற்று இருதய அறுவை சிகிச்சைக்காக பல லட்சம் செலவாகும் என்று மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில், கூலி தொழிலாளியான முருகன் தனது மகனின் உயிரை காப்பாற்ற போராடி வருகிறார்.

கடந்த 2010ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்ததில் இருந்து தனது வருமானத்திற்கும் மீறி இதுவரை சுமார் 10 லட்சம் வரை செலவு செய்தும், தற்போது மாதம் ரூ.6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை மருத்துவ செலவிற்கு செலவு செய்து தனது உயிரை காப்பாற்றி வருகிறார்.

இந்த நிலையில், தற்போது மாற்று இருதய அறுவை சிகிச்சைக்கு வழி இல்லாமல் பரிதவித்து வருகிறார். தனது மகனை காப்பாற்றக் கோரி தமிழக முதல்வருக்கு அவரது தாய் முத்துசெல்வியும், மகள் 8 வயதுடைய முத்துமாரியும் உருக்கத்துடன் கடிதம் எழுதி கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து முத்து செல்வி கூறுகையில், எனது மகன் நன்றாக படிப்பான். தற்போது இருதய நோயால் அவதிப்பட்டு வருவதால் ஒன்பதாம் வகுப்பிற்கு சேர்ந்த இரண்டு நாள் பின்னர் மூச்சுத் திணறல் காரணமாக பள்ளிக்குச் செல்ல இயலவில்லை. தொடர்ந்து மகனை திருவனந்தபுரத்தில் உள்ள சித்திரை திருநாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது மாற்று இருதயம் அறுவை சிகிச்சைக்கு சுமார் ரூ 15 லட்சம் வரை தேவைப்படுகிறது.

நாங்கள் எங்களிடம் இருந்த நிலத்தை விற்று மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறோம். தொடர்ந்து எங்களது வீடும் அடமானத்தில் உள்ளது. மேலும் மேல் சிகிச்சை செய்வதற்கு எங்களால் முடியவில்லை. மாதத்திற்கு 6000 முதல் 8000 வரை மாத்திரை செலவாகிறது அதுவும் எங்களை சுற்றி உள்ள நண்பர்கள் வாங்கி தருகிறார்கள். எனவே தமிழக முதல்வர் எங்கள் மகனை காப்பாற்ற மருத்துவ உதவி மேற்கொள்ள வேண்டும் என அவரது தங்கை முத்துமாரியும் கோரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து தர்மபுரமட ஊராட்சி மன்ற தலைவர் ரூஹான் ஜன்னத் சதாம் முருகன் இல்லத்திற்கு சென்று மாத்திரைகளை வழங்கினார்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி