குடிநீர் வசதி இல்லாத ஆரம்ப சுகாதார நிலையம்

குடிநீர் வசதி இல்லாத  ஆரம்ப சுகாதார நிலையம்
X
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள குலையநேரி குடிநீர் வசதியற்ற ஆரம்ப சுகாதார நிலையத்தால் இங்கு சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிகள் உள்ளிட்ட அனைத்து நோயாளிகளும் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

தென்காசி மாவட்டம் வி.கே.புதூர் தாலுகா, சுரண்டை அருகே குலையநேரி ஊராட்சிப்பகுதியில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரட்டை குளம், சுப்பையாபுரம், கடையாலுருட்டி, குலையநேரி, ஆனைகுளம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் தினமும் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு உள் நோயாளிகள் மற்றும் புற நோயாளி பிரிவுகள் செயல்படுகின்றன.

குடும்பக் கட்டுப்பாட்டு சேவையுடன் சிறிய நோய்கள் மற்றும் ஆரம்ப நிலையில் உள்ள நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் சிறுநீர் பரிசோதனை,ரத்த வகை பரிசோதனை இசிஜி, ஸ்கேன் மற்றும் ரத்தக் கொதிப்பு நோய், சர்க்கரை நோய் போன்ற நோய்களுக்கும் சிகிச்சை வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த மருத்துவமனையில் பெண்களுக்கு பேறு காலத்திற்கு முன் மற்றும் பின் வழங்கப்படும் சிகிச்சை சிறப்பாக வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் குடிநீர் வசதி முறையாக செய்து தரப்படவில்லை. இங்கு நிலத்தடி நீரும் சமீபகாலமாக சரிவரவில்லை. இதனால் இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு சிரமப்படுகின்றனர். இதனால் நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனை அருகில் உள்ள கிணற்று பகுதிக்கு சென்று தண்ணீர் எடுக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர்.அதுவும் இரவு நேரம் என்றால் மிகவும் சிரமமாகி விடுகிறது. பாம்புகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்த்தால் குறைந்தது ரூ. 40 ஆயிரம் முதல் ரூ. 70 ஆயிரம் வரை செலவாகிறது.அத்துடன் ஊருக்கு காட்டுப்புறப் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளபோதும் செல்லும் வழியில் போதுமான அளவுக்கு மின்விளக்கு வசதி இல்லை. இதனால் கர்ப்பிணிகளை ஆட்டோவில்தான் அழைத்துச்செல்ல வேண்டியுள்ளது. எனவே, மெயின் ரோட்டில் இருந்து மருத்துவமனைக்கு செல்வதற்கு மின்விளக்கு வசதியும், கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்ப்பதற்கு தண்ணீர் வசதியும் உடனடியாக ஏற்படுத்தித்தர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

Tags

Next Story