டாஸ்மாக் எனும் பொன்முட்டை இடும் வாத்து : அரசுக்கு மட்டுமல்ல, ஊழியர்களுக்கும் தான்
TASMAC News Today Tamil -தமிழக அரசுக்கு நிதி வருவாயை ஈட்டி தருவதில் மிக முக்கிய பங்கு வகிப்பது டாஸ்மாக் கடைகள்தான். அதிலும் முக்கியமாக தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் மட்டும் பல நூறு கோடிகள் வருமானம் காரணமாக அரசுக்கு பெரும் நிதி வருவாயை அள்ளி கொடுத்து வருகிறது.
தமிழகத்தில் டாஸ்மாக் வருவாய் கடந்த வருடம் 11 சதவீதம் அதிகரித்துள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்தது. ஒவ்வொரு வருடமும் முக்கிய பண்டிகையை முன்னிட்டு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்படும். தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் வழக்கமாக சனிக்கிழமை விடுமுறை நாளன்று சுமார் 150 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெறும்.
நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே மது விற்பனை அமோகமாக நடைபெற்றது. இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களில் ரூ.708 கோடி மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த விற்பனை இலக்கு மகிழ்ச்சி தரக்கூடியதா?
அக்டோபர் 2003 இல் தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் - 1937 இல் ஒரு திருத்தத்தை செய்ததன் மூலம் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்திற்கு மது விற்பனையில் மாநிலம் முழுவதும் ஏகபோக உரிமையை அளித்தது. அதிமுக அரசால் செய்யப்ப்பட்ட இம்மாற்றம் நவம்பர் 29, 2003 இல் அமலுக்கு வந்தது. தொடக்கத்தில் திமுக இதை எதிர்த்தாலும், 2006 ஆம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர், தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் ஏகபோக மது விற்பனையால் அரசுக்கு அதிகமான வருவாய் கிட்டியதால் இம்முடிவை மாற்ற விருப்பமின்றி தொடர்ந்து செயல்படுத்தியது. இதனால் மது விற்பனையில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் தனியுரிமை தொடர்கிறது
இந்நிறுவனத்தில் மொத்தம் 36,000 ஊழியர்கள் பணியாற்றுவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மொத்தம் 5,000க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. ஆனால், மதுவிற்பனை மூலம் டாஸ்மாக் ஊழியர்களுக்கு கிடைக்கும் மேல்வரும்படி, அரசு ஊழியர்களுக்கு கூட கிடைக்காது என்பது தான் உண்மை.
ஒரு சிறிய கணக்கு.
தீபாவளி விற்பனை ரூ. 708,00,00,000 (ரூ.708 கோடி) என அரசு தெரிவித்துள்ளது.
ஓரு குவாட்டர் பாட்டில் விலை சராசரியாக 150 என வைத்துக் கொண்டால், 4.72 கோடி மது பாட்டில்கள் விற்பனையாகி உள்ளது.
டாஸ்மாக் கடைகளில் ஒரு பாட்டிலுக்கு ரூ. 10 அதிகம் வைத்து விற்கின்றனர். அதன்படி பார்த்தால், 4.72 கோடி பாட்டில் விற்பனை மூலம், 47 கோடி ரூபாய் டாஸ்மாக் ஊழியர்களுக்கு கணக்கில் வராமல் கிடைத்துள்ளது. இந்த பணம் அனைத்தும் அவர்களுக்குள் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
இந்த பணம் எந்த கணக்கில் வருகிறது?
இந்த பணத்தை விற்பனையாளர்கள் அப்படியே தங்கள் பாக்கெட்டுகளில் போட்டுக்கொள்ள முடியாது, ஏனெனில், ஒவ்வொரு மது பெட்டிகளிலும் உள்ள உடைந்த மது பாட்டில்களுக்கு விற்பனையாளர்கள் தான் தண்டம் கட்ட வேண்டும். அதுபோக, பகுதி மேலாளர், மாவட்ட மேலாளர், ஜூனியர் அசிஸ்டன்ட் என அவர்களுக்கும் கட்டிங் தர வேண்டும்.
அது போக லோடு இறக்குபவர்களுக்கும் பணம் தர வேண்டும்.
வெறும் மூன்று நாட்கள் விற்பனையில் மட்டும் 47 கோடி அளவிற்கு கமிஷன் போகிறதென்றால், வருடத்திற்கு 36,000 கோடி டாஸ்மாக் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது எனும்போது சுமார் 2000 கோடி கமிஷனாக கிடைக்கிறது. இது தவிர மதுபாட்டில்கள் வரும் அட்டைப்பெட்டிகளை விற்பதிலும் தனி வசூல்.
டாஸ்மாக் உண்மையிலேயே பொன்முட்டையிடும் வாத்து தான்.
கறுப்புப்பணம், கறுப்புப்பணம் என கூச்சலிடுகிறோமே, அது இது தான்.
தனியார் குளிர்பானங்களுக்கு உற்பத்தி விலை ரூ. 4 என இருக்கும் போது அவர்கள் 20 ரூபாய்க்கு விற்கிறார்கள். அவர்களுக்காவது விளம்பர செலவு என இருக்கும்.
ஆனால், வெறும் 30 ரூபாய் உற்பத்தி விலை உள்ள மதுபானம், ரூ.150க்கு விற்கப்படுகிறது. அதுவும், விளம்பர செலவு எதுவுமில்லாமல். மேற்கொண்டு பத்து ரூபாய் கொடுத்து வாங்குகிறார்கள்.
மது குடித்தால் மதி அழியும் என்பார்கள். அது மதுப்பிரியர்கள் விஷயத்தில் உண்மையாகி விட்டது. அதிகபட்ச விற்பனை விலையை விட அதிகம் தரமாட்டேன் என யாரும் கூறுவதில்லை. கிடைத்தால் போதும் என எவ்வளவு ஆனாலும் வாங்கி குடிக்கத்தான் செய்கிறார்கள்.
இந்த பொன்முட்டை இடும் வாத்தை அறுத்துப்போட எந்த அரசியல்வாதியும் முன்வர மாட்டார்கள்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu