டாஸ்மாக் கடைகளில் பணம் கேட்டு மிரட்டும் கும்பல்... டிஜிபியிடம் தொழிற்சங்கங்கள் மனு...
சென்னையில் டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர்.
டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில்,சென்னையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவை சந்தித்து அளித்த மனு விவரம் வருமாறு:
தமிழ்நாடு அரசின் உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகம் நிறுவம் (டாஸ்மாக்) என்ற நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் 5400 மேற்பட்ட மதுபான சில்லரை விற்பனை கடைகளை நடத்தி வருகிறது. டாஸ்மாக் நிர்வாகமானது 38 மாவட்ட மேலாளர் அலுவலகங்களை கொண்டு செயல்பட்டு வருகின்றன.
மதுபான சில்லரை விற்பனை கடைகளில் பணிபுரியும் ஊழியர்களை அமைச்சரின் பெயரை பயன்படுத்தி சிலர் பணம் கேட்டு ஊழியர்களை மிரட்டி வருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் பணம் வசூலிப்தற்காகவே ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்திற்கு சிலர் என நியனம் செய்யப்பட்டு, அவர்கள் டாஸ்மாக் கடைகளின் தினசரி விற்பனை விபரங்களை டாஸ்மாக் அதிகாரிகளிடம் பெற்றுக்கொண்டு ஒவ்வொரு கடையாக நேரிலும், அலைபேசியிலும் தொடர்பு கொண்டு பாட்டிலுக்கு ரூ. 2 வீதம் தர வேண்டும் என்று மிரட்டி வருகின்றனர்.
டாஸ்மாக் நிறுவனத்திற்கு சம்பந்தமில்லாத அந்த நபர்களுக்கு டாஸ்மாக் அலுவலகங்களில் தனி இருக்கை ஏற்பாடு செய்து, அதிகாரிகள் துணையுடன் கடைகளின் விற்பனை விபரங்களை சேகரித்துக்கொண்டு ஊழியர்களை நேரிலும், அலைபேசியிலும் தொடர்பு கொண்டு மிரட்டுகின்றனர். இதற்கு உடன்படாத ஊழியர்களை அதிகாரிகளின் துணையுடன் கடை ஆய்வு, கடையை மூடுதல், பணியியிட மாறுதல் உள்ளிட்ட பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், அந்த கும்பல் உரிமம் இல்லாமல் மதுக்கூடங்களை நடத்துவதால் அரசுக்கு பல நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் மிரட்டுவதும் மட்டுமின்றை மற்றொரு புறம் உள்ளூர் ஆளுங்கட்சியினர் கடை ஊழியர்களை மிரட்டி பணம் வசூலிக்கும் போக்கும் தலைதூக்கி உள்ளது. அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் நிறுவனத்தில் சமூகவிரோத கும்பல் மாநிலம் முழுவதும் அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது. இத்தகைய செயலானது சட்டத்தின் ஆட்சிக்கு விடப்பட்ட சவாலாகவே எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.
அமைச்சரின் பெயரை பயன்படுத்தி செயல்படும் சமூக விரோதிகளால் டாஸ்மாக் ஊழியர்களின் உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம். எனவே, தாங்கள் இந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்திடவும், இந்த கும்பலை இயக்கும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீதும் சட்ட நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ளவும் வேண்டும்.
ஆளுங்கட்சி என்ற பெயரை பயன்படுத்தி ஊழியர்களை மிரட்டும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து டாஸ்மாக் ஊழியர்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பை வழங்க வேண்டும் என டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu