தமிழகத்தில் பிப். 1 முதல் உயர்கிறது டாஸ்மாக் மது பானங்களின் விலை
டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை பிப்ரவரி 1 முதல் உயர்த்தப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. சாதாரண ரக மது குவார்ட்டர் பாட்டிலுக்கு ரூ.10 விலை உயர்கிறது.
தமிழ்நாட்டில் 4,829 டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. தமிழக அரசின் டாஸ்மாக் கடைகளில் 43 சாதாரண வகை, 49 நடுத்தர வகை, 128 பிரீமியம் வகை பிராண்டுகள், 35 வகையான பீர், 13 ஒயின் ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் நகரங்களில் உள்ள எலைட் டாஸ்மாக் கடைகள் மூலம் வெளிநாட்டு மதுபானங்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
அவ்வப்போது, மதுபானங்களின் விலையை டாஸ்மாக் நிர்வாகம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மதுபானங்களின் விலையை உயர்த்த உள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சாதாரண மற்றும் நடுத்தர வகை மதுபானங்கள் 180 மி.லி, அதாவது குவார்ட்டர் பாட்டிலுக்கு ரூ.10 உயர்த்தப்பட உள்ளது.
அதேபோல், 180 மி.லி கொண்ட உயர்தர ரக மதுபானங்கள் விலை ரூ.20 உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 650 மி.லி கொண்ட பீர் வகைகளின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வின்படி, 375 மி.லி, அதாவது ஆஃப் பாட்டில்கள், 750 மி.லி, அதாவது ஃபுல் பாட்டில்கள், மற்றும் 1 லிட்டர் கொள்ளளவு கொண்ட மதுபான ரகங்களும் விலை உயர்த்தப்படும்
அதேபோல, 325 மி.லி பீர், 500 மி.லி டின் பீர் வகைகளுக்கும், அந்தந்த ரகத்திற்கும் கொள்ளளவிற்கும் ஏற்றவாறு விலை உயர்த்தப்பட்டு விற்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளதால் மதுபானங்கள் விலை உயர்த்தப்படுவதாகவும், இந்த விலை உயர்வு வரும் பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu