டாஸ்மாக் நிறுவன உயர் அதிகாரிகளை சந்திக்க ஊழியர்களுக்கு கெடுபிடி.. நீதிமன்றத்தில் வழக்கு…
சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).
தமிழகத்தில் டாஸ்மாக் என அழைக்கப்படும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் மூலம் மதுபான விற்பனை நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் சுமார் 5400 கடைகள் உள்ளன. 43 கிடங்குகள் உள்ளன. தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் சுமார் 30 ஆயிரம் பணியாளர்கள் வேலைபார்த்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகளை சந்தித்து முறையிடுவது உண்டு. இந்த நிலையில், டாஸ்மாக் ஊழியர்கள் தலைமை அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளை சந்திக்க வேண்டும் என்றால் அந்தந்த மாவட்ட மேலாளர்களிடம் கடிதம் பெற்று வர வேண்டும் என ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர் நலச் சங்கம் சார்பில், அதன் மாநிலச் செயலாளர் மோகன்ராஜ் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து உள்ளார். அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், டாஸ்மாக் நிறுவனத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், அவர்களுக்கு போதுமான ஊதியம் மற்றும் அடிப்படை உரிமைகள் வழங்கப்படுவது இல்லை என்பதால் சென்னையில் உள்ள தலைமை அலுவலத்தில் உள்ள நிர்வாகிகளை சந்தித்து முறையிடுவது உண்டு.
இந்தநிலையில், நவம்பர் 29ஆம் தேதி டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்ட சுற்றறிக்கையில், எந்தவொரு ஊழியரும், தலைமை அலுவலகத்தில் உயர் அதிகாரியை சந்திக்க வேண்டும் என்றால், சம்பத்தப்பட்ட மாவட்ட மேலாளரிடம் இருந்து முறையான அனுமதி கடிதம் பெறவேண்டும் என்றும், இதுதொடர்பான அறிவிப்பை ஏற்றுக்கொண்டு, சம்பந்தப்பட்ட மாவட்ட மேலாளர்களிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயல் டாஸ்மாக் ஊழியர்களுக்கு கெடுபிடி விதிப்பதோடு அவர்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் விதமாக உள்ளது என்பதால், டாஸ்மாக் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என மோகன்ராஜ் தனது மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு தொடர்பாக தமிழக அரசு, டாஸ்மாக் நிர்வாகம் ஆகியவை பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி அப்துல் குத்தூஸ், வழக்கின் விசாரணையை ஜனவரி 19 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu