4200 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பை பயன்படுத்திய தமிழர்கள் : முதல்வர் பெருமிதம்!

4200 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பை பயன்படுத்திய தமிழர்கள் : முதல்வர் பெருமிதம்!
X
தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு 4,200 ஆண்டுகளுக்கு முன்னரே நிலவி வந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக சட்டப் பேரவையில் பேசினார்.

தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு 4,200 ஆண்டுகளுக்கு முன்னரே நிலவி வந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக சட்டப் பேரவையில் பேசினார். தமிழ்நாடு தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் அறிவியல்வழி ஆய்வுகளில் கிடைத்த முடிவுகள் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன்கீழ் அறிக்கை அளித்து உரையாற்றினார்.

அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தமிழ்ச் சமூகத்தின் தொன்மை மற்றும் தொடர்ச்சியை உறுதிசெய்து, உலகுக்கு அறிவித்திட தமிழ்நாடு தொல்லியல் துறை எடுத்து வரும் மகத்தான முயற்சிகளை இந்த மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட பூம்புகார், கொற்கை, அழகன்குளம் உள்ளிட்ட சங்ககாலத் துறைமுக நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் கிடைத்த ரோமானிய நாணயங்கள், மெருகூட்டப்பட்ட மட்பாண்டங்கள், அரேபியத் தீபகற்பத்தைச் சார்ந்த அயலகப் பொருட்களை முன்னிறுத்தி, இந்தத் துறைமுகங்கள் வழியே சங்க காலத் தமிழர்கள் கடல்வழி வணிகத்தில் சிறந்து விளங்கினர் என்பதைச் சான்றுகளின் அடிப்படையில் நம்மால் நிறுவ முடிந்தது.

அதேபோல், அங்கே கிடைத்த அரியவகை சூதுபவள மணிகள், ஒளிர்மிகு நீலமணிகள் கொண்டு கங்கைச் சமவெளி மற்றும் வடமேற்கு இந்தியப் பகுதிகளுடன் தமிழர்கள் உள்நாட்டு வணிகம் மேற்கொண்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. கீழடி அகழாய்வில் வெளிப்பட்ட கட்டுமானங்கள், தொல்பொருட்களின் செய்நேர்த்தி, தொழில்நுட்பத் திறன், பொறியியல் நுணுக்கம் ஆகியவற்றை ஆராய்ந்து பார்த்ததில் சங்ககாலத் தமிழகத்தில் நன்கு முதிர்ச்சியடைந்த நகரப் பண்பாடு செழித்து வளர்ந்திருந்தது என்பதை உலகுக்கு நம்மால் அறிவிக்க முடிந்தது.

அதுமட்டுமல்ல; கீழடி, கொடுமணல் மற்றும் பொருந்தல் போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் மூலம் தமிழி எழுத்துக்களின் காலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டு என்று அறிவியல் அடிப்படையில் உறுதிசெய்யப்பட்டது. மேலும், 2600 ஆண்டுகளுக்கு முன்னரே, தமிழ்க் குடிமக்கள் பரவலான எழுத்தறிவு பெற்ற சமூகமாக விளங்கினர் என்ற உண்மையை அறிவுலகம் ஏற்றுக் கொண்டது நமக்கெல்லாம் பெருமையளிக்கக்கூடிய செய்தியாகும்.

அதைத் தொடர்ந்து, சென்ற ஆண்டு சிவகளை பகுதியில் அகழாய்வு செய்தபோது கிடைத்த நெல்மணிகளை பகுப்பாய்வு செய்து, பொருநை ஆற்றங்கரை நாகரிகம், 3,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு தொல்லியல் துறை, அகழாய்வுகளை மேற்கொள்வதிலும், தொல்பொருட்களை ஆய்வு செய்வதிலும் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகிறது. காந்த அளவியல் பகுப்பாய்வு (Magnometer Survey), ஆளில்லா வான்வழி ஊர்தி ஆய்வு (Unmanned Aerial Survey), தரை ஊடுருவல் தொலையுணர்வு மதிப்பாய்வு (Ground Penetrating Radar Survey) போன்ற புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கள ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதேபோல், அகழாய்வுகளில் கிடைக்கக்கூடிய தொல்பொருட்களை ஆய்வு செய்திட (1) தொல் தாவரவியல் (Paleo Botany), (2) தொல் விலங்கியல் (Paleo Zoology), (3) தொல் மரபணு ஆய்வு (Ancient DNA Analysis) (4) சுற்றுச்சூழல் தொல்லியல் (Environmental Archaeology) (5) மண் பகுப்பாய்வு (Soil Analysis), (6) உலோகவியல் (Metallurgy Study), (7) கடல்சார் ஆய்வு (Marine Archaeology) போன்ற பல்துறை வல்லுநர்களுடன் இணைந்து பணியாற்றிட புகழ்பெற்ற நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

அவ்வாறு அறிவியல்வழி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில் கிடைத்த ஆய்வு முடிவுகள் சிலவற்றை இந்த மாமன்ற உறுப்பினர்களுக்குத் தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

கீழடிக்கு அருகே அகரம் அகழாய்வுத் தளத்தில் சேகரிக்கப்பட்ட மண்மாதிரிகளை மகரந்தம் மற்றும் பைட்டோலித் முறையில் பகுப்பாய்வு செய்ததில், அங்கே நெற்பயிர்கள் பயிரிடப்பட்டிருப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

சிவகளை வாழ்விடப் பகுதியில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை ஆய்வு செய்ததில், அங்கே நீர் செல்லும் செங்கல் வடிகாலில் நன்னீர் சென்றுள்ளதாகவும், தேக்கிவைக்கப்பட்ட நீர்நிலையிலிருந்து இந்நீர் கொண்டு வரப்பட்டதாகவும் ஆய்வில் தெரிய வருகிறது.

இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக, மிக முக்கியமான ஒரு ஆய்வு முடிவை அறிவிப்பதில் நான் பெருமை கொள்கிறேன்.

கடந்த ஆண்டு, தமிழ்நாடு தொல்லியல் துறையால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மயிலாடும்பாறை என்ற இடத்தில் ஈமச்சின்னங்கள் மற்றும் வாழ்விடப் பகுதியில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. பாறை ஓவியங்கள், புதிய கற்காலக் கருவிகள் என அரியவகை தொல்லியல் அடையாளங்களைக் கொண்ட மயிலாடும்பாறையின் வாழ்விடப் பகுதியில் 104 செ.மீ. மற்றும் 130 செ.மீ. ஆழத்தில் சேகரிக்கப்பட்ட இரண்டு கரிம மாதிரிகள், அமெரிக்காவிலுள்ள ப்ளோரிடா மாநிலத்தின் பீட்டா பகுப்பாய்வுக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அந்தப் பகுப்பாய்வின் AMS (Accelerator Mass Spectrometry) காலக் கணக்கீடு முடிவுகள் தற்போது பெறப்பட்டுள்ளன. அவற்றின் சராசரி மைய அளவீட்டுக் காலம் முறையே கி.மு. 1615 மற்றும் கி.மு. 2172 என்று காலக் கணக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இதன்மூலம், தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு 4200 ஆண்டுகளுக்கு முன்னரே நிலவி வந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மனித இனம் இரும்பின் பயனை உணரத் தொடங்கிய பின்புதான், அடர்ந்த வனங்களை அழித்து வேளாண்மை செய்திடும் போக்கு உருவாகியுள்ளது. அந்தவகையில், தமிழ்நாட்டில் வேளாண்மைச் சமூகம் தொடங்கிய காலம் குறித்தான கேள்விகளுக்கு ஒரு தெளிவான விடை இன்று கிடைத்திருக்கிறது.

மேலும், இந்தியாவில் இரும்புக்காலப் பண்பாடு நிலவிய கங்கைச் சமவெளி, கர்நாடகம் உள்ளிட்ட 28 இடங்களில் இதுவரை AMS (Accelerator Mass Spectrometry) காலக் கணக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் தற்போது கிடைத்துள்ள மயிலாடும்பாறை ஆய்வு முடிவுகளான, 4200 ஆண்டுகளுக்கு என்பதே, காலத்தால் முந்தியது என்பது நமக்கெல்லாம் பெருமையளிக்கத்தக்க செய்தியாகும். அதேபோன்று, கருப்பு-சிவப்பு பானை வகைகள் 4200 ஆண்டுகளுக்கு முன்னரே அதுவும் புதிய கற்காலத்தின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதையும் அறியமுடிகிறது.

இந்த இரும்புக்காலம் குறித்த முக்கியமான கண்டுபிடிப்பை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பத்மஸ்ரீ திலீப் சக்ரபர்த்தி, புனே டெக்கான் கல்லூரியின் முன்னாள் இயக்குநர் பத்மஸ்ரீ பேராசிரியர் பத்தையா, ஒன்றிய அரசின் தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குநர் பேராசிரியர் ராகேஷ் திவாரி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் விபா திரிபாதி, கர்நாடக பல்கலைக்கழகப் பேராசிரியர் ரவி செட்டார் ஆகிய தலைசிறந்த வல்லுநர்கள் பாராட்டியுள்ளார்கள்.

தமிழ்நாடு தொல்லியல் துறையின் முயற்சிகள் இத்தோடு நின்றுவிடப் போவதில்லை. தொடர்ந்து தமிழர்கள் தடம்பதித்த இந்தியாவின் பிறபகுதிகளிலும், கடல் கடந்து வெற்றி கொண்ட நாடுகளிலும் அகழாய்வு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, கேரளாவின் பட்டணம், கர்நாடக மாநிலத்திலுள்ள தலைக்காடு, ஆந்திர மாநிலத்தின் வேங்கி, ஒடிசாவிலுள்ள பாலூர் பகுதிகளில் அகழாய்வு மேற்கொள்ளப்படும் என்ற செய்தியை இந்த அவைக்கு மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோன்று, சங்ககாலத் துறைமுகமான கொற்கையில் ஆழ்கடலாய்வின் முதற்கட்டமாக முன்கள ஆய்வு இந்த மாதம் தொடங்கப்பட உள்ளது. மேலும், தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின்போது கண்டெடுக்கப்பட்ட ஏராளமான பானை ஓடுகளில் காணப்படும் குறியீடுகளுக்கும், சிந்துவெளி நாகரிக முத்திரை எழுத்துகளுக்குமான உறவை ஒப்பீடு செய்து, ஆய்வு செய்திடும் திட்டத்தை தமிழ்நாடு தொல்லியல் துறை இந்தாண்டு முதல் மேற்கொள்ளும் என்பதை மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் குறிப்பிட்டதைப் போல, இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும் என்பதைச் சான்றுகளின் அடிப்படையில் அறிவியல் வழி நிறுவுவதே நமது அரசின் தலையாய கடமை என்று நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இதற்கு முத்தாய்ப்பாக தமிழகத்தில் இரும்பின் பயன்பாடு 4200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை மயிலாடும்பாறை ஆய்வு முடிவுகள் இன்று நிலை நிறுத்தியுள்ளது நமக்கெல்லாம் பெருமை. தமிழ்ச் சமூகத்தின் தொன்மை மற்றும் தொடர்ச்சியை உலகறியச் செய்திட எந்நாளும் உழைப்போம் என்று முதலமைச்சர் தமது உரையில் தெரிவித்தார்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்