காவல்துறையினரின் வாரிசுகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் தேதிகள் அறிவிப்பு
தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள், சிறைத்துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணியினர்களுக்கு பல்வேறு வசதிகளை அரசு செய்து கொடுத்து வருகிறது. இந்த நிலையில், காவல் துறையில் பணிபுரிவோர், சிறைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் பணி புரிவோரின் வாரிசுகளுக்கு தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு முகாம் நடத்த தற்போது ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாடு காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் பணிபுரியும் ஆளினர்கள் மற்றும் அலுவலர்களின் வாரிசுகள் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெரும் வகையில் வேலை வாய்ப்பு முகாம் நடத்த தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபுவின் நேரடி மேற்பார்வையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்பயனாக, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குனரகம், வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகமை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், இந்திய தொழில் கூட்டமைப்பு (CII), மற்றும் FICCI ஆகிய அமைப்புகளின் உதவியுடன் வேலை வாய்ப்பு முகாம்கள் முக்கிய நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
அதன்படி, சென்னையில் காவல் ஆணையர் சங்கர்ஜிவாலும், கோவையில் காவல் ஆணையர் பாலகிருஷ்ணனும், ஓசூரில் சேலம் காவல் துறை துணைத் தலைவர் ராஜேஸ்வரியும் இன்று முகாமை தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து, வேலூரில் 20.03.2023 மற்றும் 21.03.2023 ஆகிய தேதிகளிலும், திருச்சி மற்றும் மதுரையில் 25.03.2023 மற்றும் 26.03.2023 ஆகிய தேதிகளிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாம் மூலம் தேர்வு பெற்றவர்களுக்கு தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு முன்னிலையில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu