ரேஷன் பொருட்களை கள்ளச்சந்தையில் விற்போர் மீது கடும் நடவடிக்கை.. அரசு எச்சரிக்கை...
தமிழகத்தில் பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் பொருட்களை கடத்தி கள்ளச்சந்தையில் விற்கும் செயல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:
அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், தமிழக அரசு பொது விநியோகத் திட்டம் மற்றும் சிறப்பு பொது விநியோகத் திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அவ்வாறு, விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பண்டங்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர். உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்கள் ஆகியோர் தொடர் ரோந்து பணி மேற்கொண்டு கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பான தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக செயல்படும் நபர்கள் மீதும் கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் மீதும் இன்றியமையாப் பண்டங்கள் சட்டம் 1955-இன் படி வழக்கு பதிவு செய்து உரிய மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அவ்வாறு, தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கல் பராமரிப்பு சட்டம் 1980-இன் படி தடுப்பு காவலில் வைக்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, 16.01.2023 முதல் 29.01.2023 வரை உள்ள இரண்டு வார காலத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற ரூ.13,52,112 மதிப்புள்ள 1637 குவிண்டால் பொது விநியோகத்திட்ட அரிசி மற்றும் மண்ணெண்ணெய் 20 லிட்டர். 85 எரிவாயு உருளை ஆகியவையும், மேற்கண்ட கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 65 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், அந்த குற்றச் செயலில் ஈடுபட்ட 190 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும், கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையா பண்டங்கள் பராமரிப்புச் சட்டம் 1980-ன் கீழ் ஒரு நபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu