அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவு

அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவு
X

அமராவதி அணை. (கோப்பு படம்).

கரூர் மற்றும் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் கேரள மாநில வனப்பகுதியில் உற்பத்தியாகும் சின்னாறு, தேனாறு, பாம்பாறு உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் உறுவாகின்ற நீர் ஆதாரங்களை கொண்டு திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் அமராவதி அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் தண்ணீர் மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

கரூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சம்பா சாகுடி இறுதிகட்டத்தை நெருங்கி உள்ள நிலையில், அமராவதி அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், கரூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில், அமராவதி பழைய வாய்க்கால்களில் நாளை (8-2-23) முதல் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை தண்ணீர் திறந்துவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழக அரசின் நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:

திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களை சார்ந்த 10 அமராவதி பழைய வாய்க்கால்களின் பாசனப் பரப்புகளில் கதிர் நிலையில் உள்ள நெற்பயிற்களுக்கு 08.02.2023 முதல் 28.02.2023 முடிய சம்பா சாகுபடிக்காக, காலநீட்டிப்பு செய்து, தகுந்த இடைவெளிவிட்டு 691.20 மில்லியன் கன அடிக்கு மிகாமலும் தண்ணீர் திறந்துவிடப்படும். மேலும், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி பிரதானக் கால்வாய் பாசனப் பரப்புகளில் கதிர் நிலையில் உள்ள நெற்பயிர்களுக்கு 08.02.2023 முதல் 28.02.2023 முடிய சம்பா சாகுபடிக்காக, கால நீட்டிப்பு செய்து, தகுந்த இடைவெளிவிட்டு 532.22 மில்லியன் கன அடிக்கு மிகாமலும், அமராவதி ஆற்றின் மதகு வழியாக அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.

இதனால், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 47.117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story