2023 ஆம் ஆண்டுக்கான ஹஜ் பயணம்: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…

2023 ஆம் ஆண்டுக்கான ஹஜ் பயணம்: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…
X
ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புவோருக்கான முக்கிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இஸ்லாமியர்கள் தங்களது வாழ்நாளில் ஒருமுறையாவது ஹஜ் பயணம் மேற்கொள்வதை கடமையாக கொண்டுள்ளனர். இந்த நிலையில், தமிழகத்தில் இருந்து 2023 ஆம் ஆண்டில் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, தமிழக பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:

நடப்பு ஆண்டில் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ் நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் பெருமக்களிடம் இருந்து, மும்பையில் உள்ள இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ்நாடு மாநில ஹஜ் குழு, ஹஜ் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்திய ஹஜ் குழு மூலம் ஹஜ் 2023-க்காக விண்ணப்பிக்கும் முறை 10.02.2023 முதல் ஆன்லைனில் தொடங்கி, 10.03.2023 அன்று முடிவடைகிறது.

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை இந்திய ஹஜ் குழு இணையதளம் (www.hajcommittee.gov.in) மூலம் அல்லது மும்பை இந்திய ஹஜ் குழுவின் "HCol" செயலியினை ஆண்ட்ராய்டு கைபேசியில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.

ஹஜ் 2023-இல், விண்ணப்பதாரர்கள் ஹஜ் விண்ணப்பப் படிவத்தை கட்டணம் ஏதுமின்றி இலவசமாக சமர்ப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக இரு தவணை தடுப்பூசிகளை செலுத்தி இருக்க வேண்டும்.

இயந்திரம் மூலம் படிக்கத் தக்க பாஸ்போர்ட்டின் முதல் மற்றும் கடைசி பக்கம், வெள்ளை பின்னணியுடன் கூடிய சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், உறைத் தலைவரின் ரத்து செய்யப்பட்ட காசோலை நகல் அல்லது சேமிப்பு வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் முகவரிச் சான்றின் நகல் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த ஆண்டு, ஹஜ் பயணிகள் சென்னை புறப்பாட்டுத் தளத்தில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளலாம்.

வாழ்நாளில் ஒருமுறை மட்டும் இந்திய ஹஜ் குழு மூலமாக ஹஜ் பயணத்தை மேற்கொள்ளலாம் என்னும் விதிமுறையை இந்திய ஹஜ் குழு செயற்படுத்தி வருகிறது. 10-03-2023 அன்று அல்லது அதற்கு முன்பு வழங்கப்பட்டு, குறைந்தது 03-02-2024வரையில் செல்லக் கூடிய இயந்திரம் மூலமாக பன்னாட்டு பாஸ்போர்ட்டை விண்ணப்பதாரர்கள் வேண்டும்.

ஹஜ் 2023-ற்கான வழிமுறைகளை இந்திய ஹஜ் குழுவின் இணையதள முகவரி www.hajcommittee.gov.in மூலம் தெரிந்து கொள்ளலாம். ஆன்லைன் (online) மூலம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை மார்ச் 10 ஆம் தேதி விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்