கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்படாது: நீதிமன்றத்தில் அரசு உறுதி
சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).
தமிழகத்தில் உள்ள 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது, தகுதியில்லாத பலர், கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களாக அவசர கதியில் சேர்க்கப்பட்டதாகவும், தகுதியான உறுப்பினர்களை சேர்த்து, இறந்த, தகுதியில்லாத உறுப்பினர்களை நீக்கி திருத்தங்கள் மேற்கொள்ளும் வரை கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் அறிவிக்க தடை விதிக்க கோரி ஈரோட்டைச் சேர்ந்த சண்முகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்து இருந்தார்.
அந்த மனுவில், கூட்டுறவு சங்கங்களை திறமையான முறையில் நிர்வகிக்கும் வகையில், உறுப்பினர்களின் ஆதார் எண்களை இணைக்க வேண்டும் எனவும், இறந்த உறுப்பினர்களின் பெயரையும், இடம் மாறிய உறுப்பினர்களின் பெயரையும் நீக்கி ஆண்டுதோறும் ஜனவரி முதல் தேதியில் புதிய உறுப்பினர் பட்டியலை தயாரிக்க வேண்டும் எனவும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், அரசுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி கடிதம் அனுப்பி உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
இந்த பரிந்துரைகளை அமல்படுத்த அரசு, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், தற்போதைய நிலையில் தேர்தலை நடத்த அனுமதித்தால் அது ஜனநாயகத்தை கேலிக்கூத்து ஆக்கிவிடும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர் பட்டியலில் இடம்பெற்றுள்ள இறந்தவர்கள், இடம் மாறியவர்களின் பெயரை நீக்கி, தகுதியான உறுப்பினர்களை சேர்த்து திருத்தப்பட்ட பட்டியலை வெளியிட உத்தரவிட வேண்டும் எனவும் அந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வரை தேர்தல் அறிவிக்க தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உறுப்பினர் பட்டியலை திருத்தி அனுப்பும்படி, அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளதாகவும், குறைபாடுகளை நீக்காமல் நடத்தும் தேர்தல் நியாயமாக இருக்காது என்பதால் திருத்தப்பட்ட உறுப்பினர் பட்டியல் வெளியிட்ட பிறகே தேர்தல் அறிவிக்கப்படும் என்றும் உறுதி தெரிவித்த தமிழக அரசு, அந்தப் பணிகளை முடிக்க ஆறு வாரகால அவகாசம் வழங்க கோரியது.
அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், நான்கு வார கால அவகாசம் வழங்கினர். மேலும், மனுவுக்கு பதில் அளிக்கும்படி, கூட்டுறவு சங்கங்கள் தேர்தல் ஆணையம், கூட்டுறவுத்துறை செயலாளர், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu