வனத்துறை அமைச்சருடன் மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ சந்திப்பு...

வனத்துறை அமைச்சருடன் மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ சந்திப்பு...
X

வனத்துறை அமைச்சர் மதிவேந்தனை மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ சந்திந்து கோரிக்கை மனு அளித்தார்.

தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தனை மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ சந்திந்து கோரிக்கை மனு அளித்தார்.

தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தனை மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ நேரில் சந்தித்து அளித்த கோரிக்கை மனு விவரம் வருமாறு:

தூத்துக்குடி மாவட்டத்தில் காட்டுப் பன்றிகளின் நடமாட்டத்தால் அந்தப் பகுதி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதை சுட்டிக்காட்டி, 20.12.2022 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை ஆயிரக்கணக்கான விவசாயிகளுடன் நேரில் சென்று சந்தித்து கோரிக்கை மனு அளித்திருந்தேன். காட்டுப் பன்றிகளின் நடமாட்டத்தால் விவசாய விளைநிலங்களும், விவசாயிகளும் பாதிக்கப்படுகிறது.

வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972, அட்டவணை 3 இன் கீழ் இருக்கும் காட்டுப் பன்றிகளை அட்டவணை 5 இன் கீழ் இருக்கும் Vermin List இல் கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். அப்போதுதான் காட்டுப் பன்றிகளை அழிக்க அரசின் முன் அனுமதி தேவைப்படாது. கடந்த 2016 ஆம் ஆண்டு, காட்டுப் பன்றிகளை தீங்கு விளைவிக்கும் உயிரினமாக அறிவித்து அட்டவணை 5 இன் கீழ் Vermin List இல் கொண்டுவர, உத்தரகாண்ட் மற்றும் பீகார் அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்து இருந்தது. அந்த அனுமதி ஓராண்டுக்கு மட்டும் தான் வழங்கப்பட்டது.

அதைப்போல, காட்டுப் பன்றிகளை அட்டவணை 5 இன் கீழ் கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை இடைக்கால தீர்வாக, கேரள அரசைப் போல, தமிழ்நாடு வனத்துறை மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் கொடுத்து கிராமக் குழுக்கள் மூலம் காட்டுப் பன்றிகளை அழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அனைத்து விவரங்களையும் பொறுமையுடன் கேட்டுக் கொண்ட அமைச்சர் , வன விலங்கு சட்ட நடைமுறைகளைப் பார்த்து விட்டு, அரசு அதிகாரிகளிடமும் விவாதித்து உரிய நடவடிக்கையை விரைந்து எடுப்பதாக உறுதியளித்தார் என்றும் கால நிலை மாற்றம் மற்றும் உரம் விலை உயர்வு போன்ற பல்வேறு காரணங்களினால் ஏற்கெனவே விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதையும் சுட்டிக்காட்டி விரைந்து நடவடிக்கை எடுக்க அமைச்சரிடம் துரை வைகோ கேட்டுக் கொண்டதாகவும் மதிமுக தலைமைக் கழக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story