மத்திய அரசு பணி நியமனங்களில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு.. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…

மத்திய அரசு பணி நியமனங்களில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு.. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…
X

தமிழக முதல்வர் ஸ்டாலின். (கோப்பு படம்).

மத்திய அரசு நிறுவனங்களின் பணி நியமனங்களில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கான வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி பிரதமருக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பி உள்ளார்.

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு மற்றும் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவன பணி நியமனங்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கான வாய்ப்புகளை உறுதி செய்திட வேண்டும் என வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் அனுப்பிய கடிதம் விவரம் வருவமாறு:

நாட்டில் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கும் போதுமான வாய்ப்புகள் வழங்குவதன் மூலம் மட்டுமே சிறந்த சேவை வழங்குவதை உறுதிசெய்திட முடியும். மத்திய அரசு மற்றும் மத்திய பொதுத் துறை நிறுவனங்களில் சேருவதற்கான அவர்களது விருப்பத்தை நிறைவேற்ற முடியும்.

நல்ல நிர்வாகத்திற்கு பொது மக்களுடன் இணக்கமாகப் பழகுதல், உள்ளூர் மொழி தெரிந்திருத்தல், கலாச்சாரத்தில் பரிச்சயம் போன்றவை முக்கியமானவை. கல்வி மற்றும் தொழில்நுட்பத்தில் ஒப்பீட்டளவில் பரந்த அறிவு மற்றும் திறமையுடன் கூடிய மனித வளங்களை தமிழ்நாடு கொண்டுள்ளதால், அவற்றை நன்கு பயன்படுத்திட முடியும்.

மத்திய அரசு மற்றும் மத்திய பொதுத் துறை நிறுவனங்களின் பணி நியமனத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பல்வேறு மாணவர் நலச் சங்கங்கள், அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றன.

2021-2022 ஆம் ஆண்டிற்கான பணியாளர் தேர்வாணையத்தின் வருடாந்திர அறிக்கையில், பணியாளர் தேர்வு ஆணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதி வாய்ந்த நபர்களில், 4.5 சதவீதம் அளவில் மட்டுமே தென் மண்டலத்தைச் சேர்ந்த தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதோடு, தென் மண்டலத்தில் ரயில்வே பணியாளர் தேர்வாணையத்தால் பல்வேறு பணியிடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல என தெரியவந்துள்ளது.

இந்த செயல் வேலை தேடும் இளைஞர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும், சமூக, அரசியல் வட்டாரத்தில் கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது. இத்தகைய சமச்சீரற்ற பணித் தேர்வு முறை தவிர்க்கப்பட வேண்டிய தாக்கங்களைக் கொண்டிருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில், தமிழர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரித்திடும் வகையில், தமிழ்நாட்டில், மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையங்களால் நடத்தப்படும் அனைத்துத் தேர்வுகளையும் தமிழில் நடத்திட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் மத்திய பொதுத் துறை நிறுவனங்களின் பணி நியமனத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளித்திட வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே நிறுவனங்களில் பயிற்சி பெறுவோருக்கு, 20 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் நேரடி நியமனங்களில், பிராந்திய பிரதிநிதித்துவத்தை உறுதி செய்திடும் வகையில் முன்னுரிமை அளித்திட வேண்டும் என கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!