டி.எம்.பி.வங்கியின் முதல் அரையாண்டுக்கான நிதிநிலை அறிக்கை வெளியீடு

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் முதல் அரையாண்டுக்கான நிதிநிலை அறிக்கை செய்தியாளர்கள் மத்தியில் வெளியிடப்பட்டது.
தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 1921 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பாரம்பரியம் மிக்க பழமையான தனியார் துறை வங்கியாகும். இந்த வங்கி தொடர்ந்து 100 ஆண்டுகளுக்கும் மேலாக லாபம் ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக்கு 509 கிளைகளும், 12 மண்டல அலுவலகங்களும் உள்ளன. நாட்டில் உள்ள 16 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் தனது விரிவாக்கத்தை மெர்க்கன்டைல் வங்கி ஏற்படுத்திக் கொண்டு ஏறத்தாழ 5 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றி வருகிறது.
இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற வங்கியின் இயக்குனர்கள் குழு கூட்டத்தில் 2022 – 23 முதல் அரையாண்டின் நிதிநிலை தணிக்கை முடிவுகள் இறுதி செய்யப்பட்டது. வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அலுவலரான எஸ். கிருஷ்ணன் தணிக்கை செய்யப்பட்ட முதல் அரையாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார்.
தொடர்ந்து வங்கியின் தலைமை நிர்வாக அலுவலர் எஸ். கிருஷ்ணன் கூறியது வருமாறு:-
2022 - 23 முதல் அரை நிதியாண்டில் வங்கியானது பல்வேறு குறிப்பிடத்தக்க சாதனைகளை புரிந்துள்ளது. இதற்கு வங்கியின் திட்டமிட்ட நேர்த்தியான கொள்கைகளும், இயக்குனர் குழு தரும் உற்சாகமும், உயர் நிர்வாகக் குழுவின் சீரிய திட்டம் மற்றும் அதனை செயல்படுத்தும் அணுகுமுறையும் காரணமாகும்.
2022 - 23 முதல் அரை நிதியாண்டில் வங்கியானது தனது மொத்த வணிகத்தில் 7.43 சதவீதம் வளர்ச்சி அடைந்து 78 ஆயிரத்து 13 கோடி ரூபாயை எட்டியுள்ளது. வங்கியின் வைப்புத் தொகை 43 ஆயிரத்து 163 கோடி ரூபாய் என்ற நிலையை அடைந்துள்ளது. கடன்களை பொறுத்தமட்டில் 34 ஆயிரத்து 876 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு மற்றும் சேமிப்புக் கணக்கு தொகை 15.32 சதவீதம் வளர்ச்சி அடைந்து 13 ஆயிரத்து 192 கோடி ரூபாயாக உள்ளது.
2022 - 23 முதல் அரை நிதியாண்டில் முன்னூரிமைத் துறைகளுக்கு வழங்கப்பட்டுள்ள மொத்த கடன்கள் 22 ஆயிரத்து 878 கோடி ரூபாய் என்பதில் இருந்து 25 ஆயிரத்து 79 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் வளர்ச்சி விகிதம் 9.61 சதவீதம் ஆகும். முன்னுரிமைத் துறைகளுக்கான கடன்கள் பாரத ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள இலக்கான 40 சதவீதம் என்ற இலக்கை விட அதிகமாக 66.64 சதவீதம் என்ற விகிதத்தில் உள்ளது.
விவசாயத் துறைகளுக்கு வழங்கப்பட்ட மொத்த கடன்கள் 10 ஆயிரத்து 386 கோடியாக உள்ளது. விவசாய துறைக்கு ரிசர்வ் வங்கி நிர்ணயித்த அளவு 18 சதவீதம் மட்டுமே ஆகும். இந்தத் துறைக்கு வங்கி மொத்த கடன்களில் 29.78 சதவீதம் கடன் வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
வங்கியின் வைப்புத் தொகை 41 ஆயிரத்து 22 கோடியில் இருந்து 43 ஆயிரத்து 136 கோடியாக உயர்ந்துள்ளது. முதல் அரை நிதியாண்டில் பொது வெளியீட்டின் மூலம் 831.68 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது. இது மூலதனப் பெருக்கத்திற்கு பங்களித்துள்ளது.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் மொத்த ஏடிஎம் மையங்களின் எண்ணிக்கை 1,145 ஆகும். வங்கி கிளைகள் விரிவாக்கம் சாத்தியமான இடங்களில் அதிக அளவில் விரைவாக நிறுவப்பட உள்ளது. டிஜிட்டல் முயற்சிகள் மற்றும் டிஜிட்டல் பேங்கிங் யூனிட் வணிகம் பன்மடங்கு வளர புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது. வங்கியில் சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு கடன் அட்டை வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் புதிய ஆயுள் காப்பீடு, பொதுக் காப்பீடுகளை பாதுகாப்பான மற்றும் வசதியான காப்பீடு சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் முறையில் வழங்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் Digital on boarding வழியாக பங்குச்சந்தை பரிவர்த்தனை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu