பயணிகளை கையாள முடியாமல் தடம் மாறுகிறதா தமிழக போக்குவரத்து துறை?

பயணிகளை கையாள முடியாமல் தடம் மாறுகிறதா தமிழக போக்குவரத்து துறை?
X

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்.

பயணிகளை கையாள முடியாமல் தடம் மாறுகிறதா தமிழக போக்குவரத்து துறை என்ற கேள்வி எழுந்துள்ளது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. அரசு பதவியேற்ற ஓராண்டு காலத்திற்குள் முதல் அமைச்சரவை மாற்றம் போக்குவரத்து துறையில் தான் நடந்தது. போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பன் பிற்பட்டோர் நலத்துறை அமைச்சராக பதவி மாற்றம் செய்யப்பட்டு அதுவரை பிற்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ். எஸ். சிவசங்கர் போக்குவரத்து துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டார்.

இந்த அதிரடி மாற்றத்திற்கு காரணம் கடந்த மார்ச் 28, 29 தேதிகளில் நடைபெற்ற அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தின் போது அரசு பஸ்கள் இயக்கத்தை சரியாக கையாளாததுதான். அதுமட்டுமின்றி அந்த இரண்டு நாட்களும் பயணிகள் பட்ட அவதி என்பதை சொல்லிமாளாது. கொள்கை முடிவு என்பது ஒரு பக்கம் இருந்தாலும் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் முதலமைச்சர் ஸ்டாலின் கண்ணும் கருத்துமாக இருக்கிறார். ஆனால் அந்த இரண்டு நாட்கள் மக்கள் பட்ட அவதி அவரது காதுக்கு எட்டவே சம்பந்தப்பட்ட துறை அமைச்சரின் தலை உருண்டது. இதுதான் உண்மை.

அதனை தொடர்ந்து தற்போது அந்தத் துறைக்கு அமைச்சராக பொறுப்பேற்றுள்ள எஸ். எஸ். சிவசங்கர் இதுவரை போக்குவரத்து துறையில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எதையும் செய்யவில்லை. அதற்கு காரணம் அவருக்கு போதுமான அனுபவம் இல்லையா? அல்லது புலி பாய்வதற்கு பதுங்குவது போல் சைலண்டாக இருந்து துறையை கவனித்து வருகிறாரா? என தெரியவில்லை.


இதற்கிடையில் தற்போது 4 நாட்கள் தொடர் விடுமுறை வந்தது. அதாவது வியாழக்கிழமை தமிழ் புத்தாண்டு, வெள்ளிக்கிழமை புனித வெள்ளி, சனிக்கிழமை அரசு பள்ளி கல்லூரிக்கு விடுமுறை என அறிவித்தது, ஞாயிறு வழக்கமான விடுமுறை என4 நாட்கள் தொடர் விடுமுறை வந்ததால் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வேலை செய்பவர்கள் பணி நிமித்தமாக இருப்பவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு கிளம்பினார்கள். இதன் காரணமாக கடந்த புதன்கிழமை மாலை தமிழகத்தின் தலைநகர் சென்னை தொடங்கி வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை என அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பஸ்கள் கிடைக்காமல் தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் பயணிகள் கடும் அவதி பட்டார்கள். 4 நாட்கள் தொடர் விடுமுறை வரும் நேரங்களில் அரசு அதாவது போக்குவரத்து துறை கூடுதல் கவனம் செலுத்தி பயணிகள் பாதிக்கப்படாத அளவில் ஏற்பாடுகள் செய்வது வழக்கம். ஆனால் இம்முறை அது போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டதா என தெரியவில்லை. இதன் காரணமாக பயணிகள் பட்ட அவதிகள் கொஞ்ச நஞ்சமல்ல. ஒரு பஸ் வந்து நின்றால் அதில் ஏறுவதற்கு 300 பேர் தயாராக இருந்த சூழலில் 50 பேர் மட்டுமே ஏறி மற்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்லும் நிலை தான் ஏற்பட்டது. தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சி மத்திய பஸ்நிலையம் புதன்கிழமை இரவு அல்லோலகல்லோலப் பட்டது என்று சொன்னால் மிகையாகாது .இதே போன்ற நிலைதான் கிட்டத்தட்ட அனைத்து முக்கிய ஊர்களின் நிலையும்.

சரியாக போக்குவரத்து துறை திட்டமிடாததால் பயணிகள் பட்ட அவதியை அந்தந்த மாவட்டங்களின் உளவுத்துறையினர் அரசுக்கு அறிக்கையாக தயாரித்து அனுப்பியிருக்கிறார்கள். முதலமைச்சரின் கவனத்திற்கு இந்த அறிக்கைகள் இந்நேரம் சென்றிருக்கும். ஒரு ஆட்சி திறம்பட நடக்கிறதா என்பதற்கு அளவுகோல் ரேஷன் கடைகளை நிர்வகிக்கும் பொது விநியோகத் துறை, மக்களின் அன்றாட தொடர்பில் இருக்கும் போக்குவரத்து துறையும் தான். சாமானியன் முதல் வசதி படைத்தவர்கள் வரை இந்த இரண்டையும் பயன்படுத்த தவறுவதில்லை. இந்த இரண்டிலும் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு விட்டால் அது ஆட்சியாளர்கள் மீது தான் எதிரொலிக்கும்.ரேஷன் பொருட்கள் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை என்றால் அதற்காக காத்துக் கிடக்கும் மக்கள் அழுது புலம்பும் போது அரசின் மீது பழி தூற்றுவார்கள்.

அதேபோலத்தான் அத்தியாவசிய துறைகளில் ஒன்றான போக்குவரத்து துறையும். தமிழகத்தில் தற்போது போக்குவரத்து துறை பயணிகளை சரியாக கையாள முடியாமல் தடம் மாறிச் செல்வது போல் தெரிகிறது.இந்நிலை மாற வேண்டும் போக்குவரத்து துறையை சீரமைக்க ஆட்சியாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் இல்லை என்றால் அது ஆட்சியாளர்களுக்கு பாடம் புகட்ட தயங்காது என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!