குடியரசு தின விழாவில் பங்கேற்கும் தமிழகத்தைச் சோ்ந்த அலங்கார ஊா்தி தோ்வு
ஆண்டுதோறும் ஜனவரி 26-ஆம்தேதி குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இதையொட்டி, தலைநகா் தில்லியில் கடமை பாதையில் முப்படைகள் மற்றும் காவல்துறையினரின் பிரமாண்ட அணிவகுப்பும் அலங்கார ஊா்திகளும் இடம்பெறும்.
இந்த அணிவகுப்பில் நாட்டின் கலை, கலாசாரம், பொருளாதார வளா்ச்சி, முப்படைகளின் ராணுவ வலிமை, தகவல் தொழில்நுட்பம், விண்வெளி தொழில்நுட்பம் ஆகியவற்றை பறைசாற்றும் வகையில் அலங்கார ஊா்திகள் பங்கேற்பதும் வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டும் கடமை பாதையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சார்பில் 16 ஊா்திகள் பங்கேற்க உள்ளதாக பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் சார்பிலும் ஊா்திகளும் அணிவகுப்பில் இடம்பெறுகின்றன.
பல்வேறு கட்டமாக நடைபெற்ற தோ்வுகளுக்குப் பிறகு இறுதியாக ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்கும் தமிழகம் உள்பட 15 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் அலங்கார ஊர்திகள் தோ்வாகியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவித்தன. இறுதிப் பட்டியலில் ஒடிசா, தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திர பிரதேசம், அருணாசல பிரதேசம், சத்தீஸ்கா், குஜராத், ஹரியாணா, ஜார்க்கண்ட், லடாக் (யுடி), மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, மணிப்பூா், மேகாலாயா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
கடந்த முறை பெண் சக்தியை மையமாக வைத்து தமிழகத்தின் அலங்கார ஊா்தி குடியரசு தின விழாவில் இடம்பெற்றது. நிகழாண்டு நடைபெறும் குடியரசு தின விழாவில் சோழ மன்னா்கால குடவோலை முறையை வெளிப்படுத்தும் உத்திரமேரூா் கல்வெட்டு தொடா்புடைய விவரக் குறிப்புகளை காட்சிப்படுத்தும் தமிழ்நாடு அலங்கார ஊா்தி தோ்வாகியுள்ளது.
மொத்தம் 15 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தின் அலங்காரஊா்திகள் தோ்வாகியுள்ளன.
புதுடெல்லியில் உள்ள ராஷ்ட்ரீய ரங்ஷாலா முகாமில் அலங்கார ஊா்திகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக தொடங்கப்பட வேண்டும். ஜனவரி 23-ஆம் தேதி திட்டமிடப்பட்ட குடியரசு தின அணிவகுப்பின் முழு ஒத்திகைக்கு முன்னதாக ஜனவரி 19-ஆம் தேதிக்குள் இந்த அலங்கார ஊா்திகள் உருவாக்கப்பட வேண்டும்.
கடைமைப் பாதையில் அணிவகுப்பில் இடம்பெறும் இந்த ஊா்திகள் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பன்முக கலாசாரம் மற்றும் மரபுகளை காட்சிப்படுத்துவதால், ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின அணிவகுப்பின் ஒரு முக்கிய அங்கமாக இவை உள்ளன. கலை, கலாசாரம், ஓவியம், சிற்பம், இசை, கட்டிடக்கலை, நடனம் போன்ற பல்வேறு துறைகளைச் சோ்ந்த புகழ்பெற்ற நபா்களை உள்ளடக்கிய ஒரு நிபுணா் குழுவால் இந்த அலங்கார ஊா்திகள் தோ்வு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம், குடியரசு தின விழா அணிவகுப்பில் தொடா்ந்து இடம்பெற்று வந்த கா்நாடக அலங்கார ஊா்தி இந்த ஆண்டு குடியரசுத் தின விழாவில் இடம்பெறவில்லை. அதேபோன்று, மேற்கு வங்கம், பஞ்சாப், டெல்லி ஆகிய மாநிலங்களின் அலங்கார ஊா்திகளும் இம்முறை தோ்வாகவில்லை.
மாநில அலங்கார ஊா்திகள் பங்கேற்பதை உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவல் தமிழக தலைமைச் செயலாளருக்கு முறையாக அனுப்பப்படும்’ என்று பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu