பொங்கல் பரிசுத் தொகுப்பு எப்போது? விரைவில் அறிவிப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்பு எப்போது? விரைவில் அறிவிப்பு
X

பொங்கல் பரிசு தொகுப்பு - கோப்புப்படம் 

தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளை முதல்வா் ஸ்டாலின் ஆய்வு செய்து சென்னை திரும்பிய பிறகு அதுகுறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்பை விநியோகிப்பது தொடா்பான ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளை முதல்வா் ஸ்டாலின் ஆய்வு செய்து சென்னை திரும்பிய பிறகு அதுகுறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ரொக்கத் தொகையுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு அரிசி குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் ரொக்கம், தலா ஒரு கிலோ பச்சரிசி, சா்க்கரை, முழுக் கரும்பு அடங்கிய தொகுப்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில், வரும் பொங்கல் பண்டிகைக்கும் பரிசுத் தொகுப்பை வழங்குவது குறித்த ஆலோசனையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.

வெள்ள நிவாரணம்: பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு நிவாரணத் தொகையை வழங்க தமிழக அரசு தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், மிக்ஜம் புயலால் சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டன. இதனால், சுமார் 30 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.1,486 கோடியே 93 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் தற்போது திருநெல்வேலி, தூத்துக்குடி உள்பட நான்கு தென் மாவட்டங்களிலும் அதிகனமழையால் மிகப்பெரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தச் சேதங்களைச் சீா்செய்ய இடைக்கால நிவாரணமாக மத்திய அரசு ரூ. 2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென முதல்வா் .ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், தென் மாவட்டங்களில் மழையால் பாதிப்புகளைச் சந்தித்துள்ள மக்களுக்கு உரிய நிவாரணத் தொகைகளும் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன.

மழை, வெள்ளத்தால் எட்டு மாவட்டங்களுக்கு கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள சூழலில், பொங்கல் பரிசுத் தொகுப்பை எப்படி வழங்குவது என்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. ரொக்கத் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கலாமா என்பது தொடா்பாக பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட முதல்வா் ஸ்டாலின் தூத்துக்குடி சென்றுள்ளார் அவா் சென்னை திரும்பிய பிறகு, பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டு அதிகாரபூா்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த அதிகாரபூா்வ அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!