சாதனை படைத்த தமிழ்நாடு காவல்துறை வீரர்கள் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்ற அகில இந்திய காவல் திறனாய்வுப் போட்டியில் சாதனை படைத்த தமிழ்நாடு காவல்துறை வீரர்கள்.
அகில இந்திய காவல் திறனாய்வுப் போட்டியில் சாதனை படைத்த தமிழ்நாடு காவல்துறை வீரர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில், மத்திய பிரதேச மாநிலம், போபாலில் நடைபெற்ற 66-ஆவது அகில இந்திய காவல் திறனாய்வு போட்டியில் வெற்றி பெற்று சாதனைப் படைத்த தமிழ்நாடு காவல்துறை வீரர்கள் சந்தித்து, பதக்கங்கள் மற்றும் கேடயங்களை காண்பித்து தமிழ்நாடு முதலமைச்சரிடம் வாழ்த்துப் பெற்றனர்.
66-ஆவது அகில இந்திய காவல் திறனாய்வு போட்டி, மத்திய பிரதேச மாநிலம், போபாலில், கடந்த 13.02.2023 முதல் 17.02.2023 வரை நடைபெற்றது. இதில் அறிவியல் சார்ந்த புலன் விசாரணை திறன் போட்டி, கணினி திறன் போட்டி, வெடிகுண்டு தடுப்புத் திறன் போட்டி (நாசவேலை), மோப்ப நாய் திறன் போட்டி, வீடியோ படம் எடுத்தல் திறன் போட்டி மற்றும் தொழில் ரீதியாக புகைப்படம் எடுக்கும் திறன் போட்டி ஆகிய போட்டிகளில் தமிழ்நாடு காவல்துறையிலிருந்து 70 பேர் கலந்து கொண்டனர்.
66-ஆவது அகில இந்திய காவல் திறனாய்வு போட்டியில் தமிழ்நாடு காவல்துறையினர் 8 தங்கப் பதக்கங்களும், 1 வெள்ளிப் பதக்கமும் மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களும், என மொத்தம் 11 பதக்கங்களை வென்று சொந்த மாநிலத்திலேயே மத்திய பிரதேச அணியை தோற்கடித்து முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. மேலும், தடய அறிவியல் புலனாய்வு பிரிவு, குற்றச் சம்பவ இடங்களில் புகைப்படம் எடுத்தல் மற்றும் வீடியோ பதிவு செய்தல், வெடிகுண்டு சோதனை ஆகிய பிரிவுகளில் மூன்று கேடயங்களையும் வென்றுள்ளனர்.
பயிற்றுநர் மற்றும் குழு மேலாளருமான மதுரை மாநகர காவல் துணை ஆணையர் எஸ்.ஆறுமுகசாமி மற்றும் உதவி பயிற்றுநரான தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தின் காவல் துணைக் கண்காணிப்பாளர் எம்.பாபு ஆகியோர் தலைமையில் அனைத்து போட்டிகளிலும் அதிக மதிப்பெண் பெற்று இந்தியாவின் சிறந்த அணியாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஒட்டுமொத்த “சார்மினார் சாம்பியன்ஷிப்" கோப்பையையும் தமிழ்நாடு காவல்துறையினர் வென்றுள்ளனர்.
இந்நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி, காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ. சைலேந்திர பாபு மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu