நாளிதழ் விளம்பரத்தில் சீனக் கொடி: சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

நாளிதழ் விளம்பரத்தில் சீனக் கொடி: சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
X

அமைச்சர் கொடுத்த விளம்பரத்தில் சீனக்கொடி இருந்தது சர்ச்சையாகி உள்ளது 

குலசேகரப்பட்டினம் ராக்கெட்தள அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அளித்த விளம்பரத்தில் சீனக் கொடி இருந்தது சர்ச்சையாகி உள்ளது

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. இதனை வாழ்த்தி மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக உள்ள அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் இன்றைய நாளிதழ்களில் விளம்பரம் ஒன்றை அளித்திருந்தார்.

அதில் சில ராக்கெட்களின் படங்களும் இடம்பெற்றிருந்தன. அதில் பிரதானமாக இடம்பெற்றிருந்த ராக்கெட்டில் சீனாவின் கொடி இடம்பெற்றிருந்தன. அருகில் இருந்த மற்றொரு ராக்கெட்டில் சீன எழுத்துகள் இடம்பெற்றிருந்தன.

இந்த விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்ட பா.ஜ.க., தி.மு.க. மீது கடுமையாக தாக்குதல் தொடுத்தது. இது குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "திமுகவின் இன்றைய விளம்பரம் நகைப்புக்குரியதாக உள்ளது. விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றத்தை அவர்கள் ஏற்கத் தயாராக இல்லை. இந்தியாவின் விண்வெளி வெற்றியை உலகிற்கு முன்வைக்க அவர்கள் விரும்பவில்லை. நமது விஞ்ஞானிகளையும் நமது விண்வெளித் துறையையும் அவமதித்துள்ளனர், அதற்காக அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

இதற்குப் பிறகு பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, ட்விட்டர் பதிவு ஒன்றில் இது தொடர்பாக தி.மு.கவை கடுமையாக விமர்சித்திருந்தார். "அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று தமிழ் நாளிதழ்களில் அளித்துள்ள விளம்பரம் சீனாவுக்கு அவர்கள் விசுவாசமாக இருப்பதையும் நமது நாட்டின் இறையாண்மையை அவர்கள் முற்றிலுமாக புறந்தள்ளியிருப்பதையும் காட்டியிருக்கிறது" என்று குறிப்பிட்டார்.

தமிழகத்தில் பிரதமர் இருக்கும் நாளில், தி.மு.க அமைச்சர் ஒருவர் சீன ராக்கெட் மூலம் பத்திரிக்கை விளம்பரம் கொடுக்க, சீனியர் எம்.பி.யான கனிமொழி, ‘சீனா படத்தை வைத்திருப்பதில் என்ன தவறு?’ என்று வாதாடினார்

இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்த தி.மு.கவின் தூத்துக்குடி தொகுதி எம்.பி. கனிமொழி, "யாரோ ஆர்ட் ஒர்க் செய்தவர்கள் இந்தப் படத்தை போட்டிருக்கிறார்கள். சீனப் பிரதமர் இங்கே வருகிறார். அவரை பிரதமர் வரவேற்று மகாபலிபுரத்தில் வாக்கிங் சென்றார்கள். அதை எதிரி நாடு என யாரும் அறிவிக்கவில்லை" என்று தெரிவித்தார்.

சர்ச்சைக்குள்ளான இந்த விளம்பரம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒரு வடிவமைப்பு நிறுவனத்தில் வடிவமைப்புச் செய்யப்பட்டு, பத்திரிகைகளுக்கு அனுப்பப்பட்டது.

அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் பதிலளித்த அவரது உதவியாளர், அந்த விவகாரம்தான் முடிந்துவிட்டதே. அந்தப் பிரச்னை தீர்க்கப்பட்டுவிட்டது. அந்த விவகாரம் முடிந்துவிட்டது. சீனாவை எதிரி நாடு என்று யாரும் அறிவிக்கவில்லையே" என்று மட்டும் பதிலளித்தார்.

"ராக்கெட் ஏவுதளத்தை இங்கு வரவிடாமல் தடுக்க திமுக விரும்புகிறது. அதற்காக அவர்கள் தங்கள் (சீன) எஜமானர்களை மகிழ்விக்க எந்த எல்லைக்கும் செல்கிறார்கள். இந்தியா கொண்டாடும் போது.. சீனாவையும், சீன மக்களையும் பெருமைப்படுத்தும் திமுகவை நாங்கள் கொண்டுள்ளோம். இந்த விவகாரத்தில் குறைந்த பட்ச மன்னிப்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம். என்று அண்ணாமலை .சாடினார்

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்