'தமிழகத்தில் நடப்பது கௌரவர் ஆட்சி' ஜெயக்குமார் திருச்சியில் பேட்டி
தேர்தல் வழக்குகளில் கைதாகி நிபந்தனை ஜாமீனில் விடுதலையான அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திருச்சி கண்டோன்மெண்ட் காவல்நிலையத்தில் இன்று இரண்டாவது நாளாக நேரில் ஆஜராகி கையெழுத்திட்டார்.
பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்ட பொய் வழக்கு காரணமாக மேலாண்மை நீதிமன்றம் எனக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதனடிப்ப டையில் இன்று இரண்டாவது நாளாக திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு இருக்கிறேன். இந்த விடியா தி.மு.க. அரசுக்கு தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வக்கில்லை.
தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் இருக்கக்கூடாது என நினைக்கிறார்கள். குறிப்பாக அ.தி.மு.க.வை ஒழித்துக்கட்ட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு கழக முன்னாள் அமைச்சர்கள், முன்னோடிகள், கழகத் தொண்டர்கள் மீது பொய் வழக்கு போட்டு வருகிறார்கள். இந்த இயக்கத்தை அழித்து விட லாம் என ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். தமிழகத்தில் தற்போது நடப்பது கௌரவர்கள் ஆட்சி. இது வீழ்ந்து மீண்டும் பாண்டவர்கள் ஆட்சி அமையும்.
இந்த ஒன்பது மாத கால ஆட்சியில் கிஞ்சிற்றும் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படவில்லை. உதாரணமாக கடந்த ஜெயலலிதா ஆட்சியில் திருச்சி மாநகரில் ரூ.5 ஆயிரம் கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொண்டு வரப்பட்டது. 2019-முதல் திட்டப்பணிகள் சிறப்பாக நடந்து வந்தன. இப்போது அந்தப் பணிகள் நத்தை வேகத்தில் நடக்கின்றன. சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.
1972-ல் எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்தை உருவாக்கிய போது சொல்ல முடியாத அளவுக்கு பெரும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஆட்சிக்கு வரவிடாமல் பல வழக்குகளை போட்டார்கள். அதை எல்லாம் மீறி எம்.ஜி.ஆரை மக்கள் முதல்வராக தேர்ந்தெடுத்தார்கள். முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டிலிருந்து கிலோ கணக்கில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தவறான விஷம பிரசாரம் செய்கிறார்கள். திரும்பத் திரும்ப அதை சொல்லும் போது இயக்கம் மீது மக்களுக்கு கெட்ட பெயர் உருவாகும் என்று நினைக்கிறார்கள். நான் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றுதான் நீதிமன்றம் எனக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. பேட்டி அளிக்க கூடாது என்று சொல்லவில்லை.
என்னை மட்டுமல்ல ஒன்றரை கோடி தொண்டர்களையும், தமிழக மக்களின் வாயையும் மு.க.ஸ்டாலினால் மூட இயலாது. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்ந்தது. எத்தனை வழக்கு போட்டாலும் சரி, அதற்கு அ.தி.மு.க. தொண்டர்கள் அஞ்சமாட்டார்கள். நீதிமன்றத்தின் மூலம் நீதியை நிலை நாட்டுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அடுத்த பிரதமர் மு.க. ஸ்டாலின் என்று சொல்கி றார்களே என கேட்டதற்கு, இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த ஜோக் என பதிலளித்தார்.
பேட்டியின் போது முன்னாள் அமைச்சரும், மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான வெல்லமண்டி நடராஜன், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu