ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்: தமிழக அரசு அதிரடி
முதல்வர் ஸ்டாலின் மற்றும் கவர்னர் ஆர் என் ரவி
சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு எதிரான தண்டனையை நிறுத்தி வைத்து தீர்ப்பளித்த நிலையில், ஆளுநர் ரவி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்காமல் இருப்பதாக கூறி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தண்டனை மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கவில்லை என்பதாலும் பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதி அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது.
சொத்துகுவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொன்முடி முறையிட்டார். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்திவைத்தது. இதற்கு முன், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அமைச்சராக இருந்த பொன்முடியிடம் இருந்த அமைச்சர் பொறுப்பு மற்றும் எம்.எல்.ஏ பதவி பறிக்கப்பட்டது
இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ ஆனார். இது மட்டும் இல்லாமல் முதலமைச்சர் ஸ்டாலின் பொன்முடிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கியும், பொன்முடியை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துவைக்க ஆளுநருக்கு கடிதமும் எழுதியுள்ளார்.
பதவி பிரமாணம் செய்து வைக்க இருந்த நிலையில் ஆளுநர் ஆர்.என் ரவி இரண்டு நாள் பயணமாக டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். மேலும், பொன்முடிக்கு வழங்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதே தவிர தண்டனை ரத்து செய்யவில்லை. எனவே பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என ஆளுநர் கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் அவருக்கு அமைச்சர் பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu