தமிழக அரசு விருதுகள் யார் யாருக்கு? முழு விவரம்
தமிழ் மொழிக்கும், தமிழ் பண்பாட்டு வளர்ச்சிக்கும் தொடர்ந்து பணியாற்றி வருவோரை பாராட்டி தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ் மொழி, பண்பாட்டை வளர்க்க தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுதவிர பல்வேறு நபர்கள் தங்களது படைப்புகள், ஆய்வுகள் மூலம் தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.
2023-ஆம் ஆண்டிற்கான சமூகநீதிக்கான “தந்தை பெரியார் விருது”-க்கு சமூக நீதி கண்காணிப்புக் குழு தலைவர் சுப. வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2023-ஆம் ஆண்டிற்கான “டாக்டர் அம்பேத்கர் விருது”-க்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி. சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தி வெற்றி பெறும் மாணவச் செல்வங்களுக்கு விழா எடுத்து ரூபாய் 3 லட்சம் பரிசு வழங்கியும் உலகத் திருக்குறள் மாநாடு மாநில அளவில் இரு முறை நடத்தி தமிழ்த் தொண்டாற்றி வரும் பாலமுருகனடிமை சுவாமிகளுக்கு 2024ஆம் ஆண்டுக்கான அய்யன் திருவள்ளுவர் விருதினை தமிழக அரசு வழங்குகிறது.
பேரறிஞர் அண்ணா அவர்களின் முதன்மைத் தொண்டர் என பாராட்டப்பட்டவரும் 18 வயது முதல் திராவிட இயக்கத்தில் ஈடுபட்டு பல்வேறு போராட்டங்களில் பங்கு கொண்டு சிறை சென்றவருமான பத்தமடை பரமசிவத்துக்கு 2023ஆம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருதினை தமிழக அரசு வழங்குகிறது.
தேசியத் தமிழ்க் கவிஞர் பேராயம், சிலப்புச் செல்வர் ம.பொ.சி அவர்களைக் கொண்டு இளங்கோ இலக்கிய மன்றம் ஆகிய அமைப்புகளைத் தொடங்கியவரும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான உ. பலராமனுக்கு 2023ஆம் ஆண்டுக்கான பெருந்தலைவர் காமராசர் விருதினை தமிழக அரசு வழங்குகிறது.
மேலும், தமிழ்நாடு அரசின் முதன்மையான பல்கலைக்கழகங்கள் கேரள மாநில அரசின் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பாடத்திட்டத்தில் இடம் பெறும் அளவிற்கு கவிதைகளைப் படைத்த கவிஞர் பழனி பாரதிக்கு 2023ஆம் ஆண்டுக்கான மகாகவி பாரதியார் விருதினை தமிழக அரசு வழங்குகிறது.
முத்தமிழறிஞர் கலைஞரால் முத்தரசனாரின் "கற்கண்டு கவிதை கேட்டு கழிப்பேறுவகை கொண்டேன்" என்று பாராட்டைப் பெற்றவரும் தமது 92ஆவது அகவையிலும் தனித்தமிழ் வேட்கை அகலாமல் அருந்தமிழ்ப்பணியாற்றி வரும் எழுச்சிக் கவிஞர் ம. முத்தரசுக்கு 2023ஆம் ஆண்டுக்கான பாவேந்தர் பாரதிதாசன் விருதினை தமிழக அரசு வழங்குகிறது.
பல்வேறு நாடுகளின் ஆவணக் காப்பகங்களில் தகவல்களைத் திரட்டி வரலாற்று நூல்களை எழுதியவரும் சோழமண்டல கடற்கரையை முழுமையாக ஆய்வு செய்தவருமான பேராசிரியர் எஸ். ஜெயசீல ஸ்டீபனுக்கு 2023ஆம் ஆண்டுக்கான தமிழ்த் தென்றல் திரு. வி. க. விருதினை தமிழக அரசு வழங்குகிறது.
தமிழ் இலக்கணத்தை மாணவர்கள் எளிமையாக கற்கும் வகையில் பாடல்களாக யாத்தளித்த முனைவர் இரா. கருணாநிதிக்கு 2023ஆம் ஆண்டுக்கான முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருதினை தமிழக அரசு வழங்குகிறது.
விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ரூ.2 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப்பெறுவார்கள். இவ்விருதுகளை தமிழ்நாடு முதலமைச்சர்ஸ்டாலின் நாளை வழங்குகிறார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu