20 அரசு பல்கலைக்கழகங்களை கொண்டது தமிழ்நாடு: ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு

20 அரசு பல்கலைக்கழகங்களை கொண்டது தமிழ்நாடு: ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு
X
பல்கலைக்கழகங்களின் வலிமைகள், பலவீனங்கள் குறித்த நேர்மையான மதிப்பீட்டை செய்ய வேண்டும் -துணைவேந்தர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை

அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் உடனான தமது முதல் கூட்டத்தை தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று (30.10.2021) நடத்தினார்.

அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் சாதனைகள் குறித்து துணைவேந்தர்கள் வழங்கிய பவர்பாயின்ட் விளக்கக்காட்சிகளை அவற்றின் வேந்தரான ஆளுநர் கண்டார். அரசு பல்கலைக்கழங்களின் நிலை குறித்தும் நிதி உள்ளிட்டவற்றை வழங்கி மாநில அரசு அவற்றுக்கு எவ்வாறு உதவுகிறது என்பது குறித்தும் மாநில அரசின் மூத்த செயலாளர்கள் ஆளுநரிடம் எடுத்துரைத்தனர்.

கூட்டத்தில் உரையாற்றிய ஆளுநர், 20 அரசு பல்கலைக்கழகங்களை கொண்டிருப்பதற்காக தமிழ்நாட்டை பாராட்டினார். மாநிலத்தில் மாணவர் சேர்க்கை விகிதம் சிறந்த முறையில் இருப்பதற்காகவும் அவர் பாராட்டு தெரிவித்தார். மாநிலத்தின் உயர்கல்வி விரிவடைந்திருக்கும் நிலையில், சிறப்பான கல்வி மற்றும் தரமான ஆராய்ச்சி மீது கவனம் செலுத்துமாறு துணைவேந்தர்களை ஆளுநர் கேட்டுக்கொண்டார். வலிமைகளை மேம்படுத்தவும், பலவீனங்களை சரி செய்யவும் தங்களது பல்கலைக்கழகங்களின் வலிமைகள் மற்றும் பலவீனங்கள் குறித்த நேர்மையான மதிப்பீட்டை செய்யுமாறு துணைவேந்தர்களுக்கு அவர் ஆலோசனை தெரிவித்தார். தரமான ஆராய்ச்சிகள் நடைபெற்று அவை பிரபல சஞ்சிகைகளில் வெளியாக வேண்டும் என்ற தேவையை அவர் வலியுறுத்தினார்.

பல்கலைக்கழகங்கள் கற்பித்தல் மூலம் அறிவை பரப்புகின்றன என்றும் ஆராய்ச்சியின் மூலம் அறிவை உருவாக்குகின்றன என்றும் கூறிய ஆளுநர், உயர் கல்வியின் தரத்தை உறுதி செய்வதற்காக அறிவு உருவாக்கத்தில் தொடர் மேம்பாடு இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். ஆசிரியர்களை தேர்வு செய்வதில் தரத்தை உறுதி செய்யுமாறு துணைவேந்தர்கள் ஆளுநர் அறிவுறுத்தினார்.

குறிப்பாக நிதி சவால்களை எதிர்கொள்வதற்கு தமிழக அரசு பல்கலைக்கழகங்களுக்கு உதவுவது குறித்து பாராட்டு தெரிவித்த ஆளுநர், கல்வி மற்றும் ஆராய்ச்சியின் தரத்தை மேம்படுத்துமாறு பல்கலைக்கழகங்களை அறிவுறுத்த அரசை கேட்டுக் கொண்டார்.

அனைத்து துணைவேந்தர்கள், பதிவாளர்கள் மற்றும் மாநில அரசின் மூத்த செயலாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். ஆளுநரின் செயலாளர் ஆனந்த்ராவ் வி பட்டீல் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களை வரவேற்றார். ஆளுநரின் துணை செயலாளர் (பல்கலைக்கழகங்கள்) சி.முத்துக்குமரன் நன்றி தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!