பயிர் காப்பீடு குறித்து தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும்: வேல்முருகன்
தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி பாசனப் பகுதி குறுவை சாகுபடிக்காக நடப்பாண்டு எப்போதும் இல்லாத அளவிற்கு கடந்த மே மாதம் 24 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. மேட்டூர் அணையில் நீர் இருப்பு திருப்திகரமாக இருந்த நிலையில், காவிரி பாசனப் பகுதிகளில் குறுவை சாகுபடி பரப்பு அதிகரிக்கும் என்றும் தஞ்சை மாவட்ட த்தில் குறுவை சாகுபடி இலக்கை தாண்டி 1 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இச்சூழலில், நடப்பாண்டு குறுவை சாகுபடி செய்துள்ள நெற்பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய இதுவரை தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிப்பு வராமல் இருப்பது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்தாண்டு இதேபோன்ற நிலை நீடித்ததால் குறுவை பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இம்மாதம் 31 ஆம் தேதிக்குள் குறுவை பயிருக்கான காப்பீடு செய்ய வேண்டுமென்று ஏற்கனவே மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், காப்பீடு செய்வதற்கான நிறுவனம் எது என்று தமிழ்நாடு அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.
கடந்த ஆண்டு குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் பூச்சி தாக்குதல், பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்டு இழப்பீடு பெற இயலாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். காலம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்திருந்த நிவாரணமும் முழுமையாக கிடைக்கவில்லை. இந்தாண்டும் அதே நிலை நீடித்தால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக, குறுவை சாகுபடி செய்வதற்கு, கந்துவட்டி, நகைக்கடன் வாங்கியுள்ள சிறு, குறு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
தற்போதுள்ள பருவநிலை மாற்றத்தால் குறுவை சாகுபடியில் பூச்சி தாக்குதல், அறுவடை காலத்தில் இழப்பு ஏற்படும் என்ற சூழ்நிலை நிலவுகிறது. எனவே, தமிழ்நாடு அரசு குறுவை பயிர் காப்பீடு செய்வதற்கான காப்பீட்டு நிறுவனம் எது என்ற அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும். எந்த நிறுவனமும் காப்பீடு பெற வரவில்லையென்றால் தமிழ்நாடு அரசே தனியாக பயிர் காப்பீடு செய்வதற்கான நிறுவனத்தை துவக்கிட வேண்டும்.
மேலும், குறுவை பயிர் காப்பீடு செய்வதற்கான காலத்தை ஆகஸ்ட் 20 வரை நீட்டிக்கவும், கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க தமிழ்நாடு வேளாண் துறையும், தமிழ்நாடு அரசும் விரைந்து செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu