சிறந்த திருநங்கைக்கான தமிழக அரசு விருது: வேலூர் திருநங்கை ஐஸ்வர்யா தேர்வு

சிறந்த திருநங்கைக்கான தமிழக அரசு விருது: வேலூர் திருநங்கை ஐஸ்வர்யா தேர்வு
X

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வேலூர் திருநங்கை ஐஸ்வர்யாவுக்கு முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கினார்.

தமிழக அரசின் 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட வேலூர் திருநங்கை ஐஸ்வர்யாவுக்கு முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கினார்.

தமிழ்நாட்டில் திருநங்கைகளின் நலனிற்காக சிறப்பான முறையில் சேவைபுரிந்து, அவர்களுக்குள் முன்மாதிரியாக திகழும் திருநங்கை ஒருவர், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவால் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வோர் ஆண்டும் திருநங்கைகள் தினமான ஏப்ரல் 15 ஆம் நாளில் அவர்களை சிறப்பிக்கும் பொருட்டு சிறந்த திருநங்கை விருது கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விருதிற்கு தேர்ந்தெடுக்கப்படும் திருநங்கைக்கு 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்படுகிறது. அந்த வகையில், திருநங்கைகள் சமூகத்திற்கு முன்மாதிரியாக திகழ்வதோடு, திருநங்கையர்களின் முன்னேற்றத்திற்காக கடந்த 22 ஆண்டுகளாக தனது கிராமியம் மற்றும் நாடக கலையின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி சேவை புரிந்து வரும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை ஐஸ்வர்யா இந்த ஆண்டுக்கான சிறந்த திருநங்கை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

அவரின் சிறந்த சேவையை பாராட்டி, தமிழ்நாடு அரசின் 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருது மற்றும் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஐஸ்வர்யாவிடம் வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியில், மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தலைமைச் செயலாளர் முனைவர் இறையன்பு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இயக்குநர் ரத்னா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture