தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி
X
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளி வந்து உள்ளது.

தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தினமும் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். மேலும் முடிவுற்ற அரசு திட்டப்பணிகளை தலைமை செயலகத்தில் இருந்தபடியே காணொலி காட்சி மூலமும் தொடங்கி வைக்கிறார். நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விட மறுத்து வரும் கர்நாடக அரசின் செயல்பாடுகள் மற்றும் அதற்காக எடுக்கவேண்டிய சட்ட நடவடிக்கைகள் பற்றி இன்று காலை அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் இன்று பிற்பகல் சென்னை கிரீம்ஸ் சாலையில் அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் திடீர் என அனுமதிக்கப்பட்டார். முதல்வர் திடீர் என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதற்கிடையில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் முதல்வருக்கு வழக்கமான மாதாந்திர உடல் பரிசோதனை செய்யப்பட உள்ளது. மருத்துவ பரிசோதனை முடிந்து நாளை காலை வீடு திரும்புவார். உடல் சோர்வு மற்றும் வழக்கமான பரிசோதனை முதல் அமைச்சருக்கு செய்யப்பட உள்ளது என கூறப்பட்டு இருந்தது.

முதல் அமைச்சர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளை பார்க்க வருபவர்கள் போலீஸ் சோதனைக்கு பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

Tags

Next Story