சர்வதேச புத்தகக் கண்காட்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் குறித்த புத்தகம் வெளியீடு..

சர்வதேச புத்தகக் கண்காட்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் குறித்த புத்தகம் வெளியீடு..
X

புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றோர்.

ஷார்ஜாவில் நடைபெற்ற சர்வதேச புத்தகக் கண்காட்சியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குறித்த புத்தகம் வெளியிடப்பட்டது.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குறித்து பன்னாட்டுத் தமிழறிஞர்கள் எழுதிய கவிதை மற்றும் கட்டுரைத் தொகுப்புகள் அடங்கிய, 'மக்கள் மனம் கவர்ந்த முதல்வர்' என்ற புத்தகம் கேலக்ஸி பதிப்பகத்தால் வெளியிட்டப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா வளைகுடா நாட்டின் முக்கிய பகுதியான ஷார்ஜாவில் நடைபெற்ற பன்னாட்டு புத்தக கண்காட்சியில் நடைபெற்றது.

கல்லிடைக்குறிச்சி சமூக ஆர்வலர் முகமது முகைதீன், கவிஞர் பஷீர் ஆகியோர் தொகுத்து இருந்த புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு, பிரைன்-ஓ-பிரைன் நிர்வாக இயக்குநர் ஆனந்த் சுப்ரமணியம் தலைமை வகித்தார். கல்லிடைக்குறிச்சி முகைதீன் வரவேற்புறு பேசினார்.

தமிழக எழுத்தாளர் ஆழி செந்தில் நாதன் புத்தகத்தின் முதல் பிரதியை வெளியிட, முதல் பிரதியை முன்னாள் மாவட்ட நீதிபதி முகமது ஜியாவுதீன் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து, நீதிபதி முகமது ஜியாவுதீன் பேசியதாவது:

தமிழ்நாட்டில் வாழுகிற அனைத்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதோடு, கடல் கடந்து வாழ்கிற தமிழர்களின் கனவுகளையும் நனவாக்க கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அவரது உழைப்பை வியந்து பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்களும், கவிஞர்களும், சிந்தனையாளர்களும் வெளிநாடு தமிழர்கள் கலந்து கொண்ட இலக்கிய அரங்கில் வாசிக்கப்பட்ட கவிதைகள் மற்றும் கட்டுரைகளின் தொகுப்பை புத்தகமாக வெளியிட்டு இருப்பது மிகுந்த சிறப்புக்குரியது ஆகும்.

புத்தக வாசிப்பு எந்த சமூகத்தில் வளர்கிறதோ அந்த சமூகத்திற்கு வானம் வசப்படும். தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சரான பிறகு புத்தக விற்பனையும், வாசிக்கும் பழக்கமும் வளர்ந்திருக்கிறது. குறிப்பாக, சென்னையில் மிகப் பழமையான முக்கிய புத்தகக் கடைகளில் ஆங்கில புத்தகங்கள் மட்டும்தான் கடையின் முன் வரிசையில் அடுக்கி வைத்திருப்பார்கள்.

ஆனால், தற்போது தமிழ் ஆன்மீக நூல்களும், அரசியல் நூல்கள், திருக்குறளும், சங்க இலக்கியங்களும் புதினங்களும் புத்தக கடைகளின் முதல் வரிசையில் அடுக்கி வைத்து இருக்கிறார்கள். ஸ்டாலின் முதலமைச்சர் ஆனதும் தனக்கு யாரும் சால்வை அணிவிக்க வேண்டாம் என்று அறிவித்து புத்தகங்கள் வழங்குகிற பழக்கத்தை ஊக்கப்படுத்தினார்.

தற்போது அரசு விழாக்களில் நினைவுப் பரிசுகளாகவும், முதல் அமைச்சர் மற்றும் அமைச்சர்களை பார்ப்பதற்கு போகும் அனைவரும் புத்தகம் வாங்குகிறார்கள். அதனால் தமிழ் புத்தகங்கள் முதல் வரிசைக்கு வந்து விட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தருகிற புத்தகங்களை அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கும், மாணவர்கள் படிக்கும் நூலகங்களுக்கும் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

அதற்கும் மேலாக அண்ணா அறிவாலயத்தில் அதற்காக ஒரு மேலாளரை நியமித்து வருகிற புத்தகங்களை எல்லாம் ஒழுங்குபடுத்தி, தமிழ்நாடு முழுவதும் உள்ள நூலகங்கள், சமூக அக்கறை கொண்ட இளைஞர்கள் நடத்தும் படிப்பகங்கள் ஆகியவற்றுக்கு அனுப்புகிறார்கள்.

நூலகம் மற்றும் படிப்பகம் நடத்துபவர்கள் அண்ணா அறிவாலய மேலாளருக்கு கடிதம் அனுப்பினால், அதை சரி பார்த்து நூறு புத்தகத்திலிருந்து 500 புத்தகம் வரை இலவசமாக அனுப்பி வைக்கிறார்கள். இதன் மூலம் தமிழகம் முழுவதும் அனைவருக்கும் நல்ல புத்தகங்களை வாசிக்கிற வாய்ப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவாக்கி இருக்கிறார்.

வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு வானம் வசப்படும். ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் நடக்கிற இத்தகைய அற்புதமான விஷயங்களால் தமிழ் இளைஞர்களுக்கு வாசிக்கும் பழக்கம் வளரும் அதன்மூலம் வானம் வசப்படும் என்பது உறுதியாகும் என்று நீதிபதி முகமது ஜியாவுதீன் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளரும், தொழில் முனைவோருமான ஜெசிலா பானு, Booktopia நிறுவனர் மலர்விழி பாலாஜி, யுனிவர்சல் பப்ளிகேசன்ஸ் ஷாஜஹான், டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன், தங்கம் சேக்மைதீன் மற்றும் தொழில் அதிபர்கள், சமூக ஆர்வலர்கள், அமீரக எழுத்தாளர், வாசகர் குழுமத்தினர் மற்றும் அமீரகத் தமிழர்கள் திரளாக கலந்து கொண்டு பேசினார்கள்.

நிகழ்ச்சியில், கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளைக்கு அஸிஸ்ட் வோர்ல்ட் ரிக்கார்ட் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியை கேலக்சி பதிப்பகத்தின் பாலாஜி பாஸ்கரன் ஒருங்கிணைத்தார். பிலால் அலியார் தொகுப்புரை வழங்கினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!