தமிழக அமைச்சரவையில் மாற்றம்: கழட்டி விடப்பட்ட பால்வளத்துறை அமைச்சர்
தமிழக முதல்வர் ஸ்டாலின். (பைல் படம்)
தமிழக அமைச்சரவை கூட்டம் கடந்த 2ம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்ட நிலையில், அமைச்சரவை மாற்றம் பற்றியும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வரும் மே 11ஆம் தேதி தமிழக அமைச்சரவை மாற்றம் நடைபெற உள்ளதாகவும், புதிய அமைச்சரவையில் மன்னார்குடி எம்.எல்.ஏ டிஆர்பி ராஜா இடம்பெறுவார் எனவும், சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்தன.
இந்நிலையில், பால்வளத்துறை அமைச்சராக இருக்கும் ஆவடி நாசரை விடுவித்து, எம்பி டி.ஆர்.பாலுவின் மகனும், மன்னார்குடி தொகுதியின் எம்.எல்.ஏ-வும் ஆன டி.ஆர்.பி.ராஜாவை அமைச்சராக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.
மன்னார்குடி எம்.எல்.ஏ-வாக இருக்கும் டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் முதல்வர் ஸ்டாலின் கோரியிருந்தார். அந்த கோரிக்கையை ஏற்று ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். அதேபோல் பால்வளத்துறை அமைச்சராக இருக்கும் ஆவடி நாசரை விடுவிக்கவும் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆளுநரின் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ளார்.
அதன்படி மே 11 ஆம் தேதி, காலை 10.30 மணியளவில் ஆளுநர் மாளிகையில் வைத்து டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டி.ஆர்.பி ராஜா அமைச்சராவதன் மூலம் டெல்டா மாவட்டத்திற்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் கிடைக்கிறது. அமைச்சராகப் போகும் டி.ஆர்.பி ராஜா, மன்னார்குடி தொகுதியில் மூன்று முறை வென்றவர் என்பதும், தற்போது திமுக ஐடி விங் செயலாளராக பணியாற்றி வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu