தமிழக பட்ஜெட் 2022-23: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உரை

தமிழக பட்ஜெட் 2022-23: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உரை
X
தமிழ்நாடு சட்டசபையில் 2022-2023-ம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மூலம் தாக்கல் செய்தார்.



தமிழ்நாடு சட்டசபையில் 2022-2023-ம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மூலம் தாக்கல் செய்தார். காலை நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின், உடனே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இன்றைய பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியானது. தமிழ்நாடு அரசின் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உரையில் தெரிவித்ததாவது :

நிறைவேற்றிய ஐந்து தேர்தல் வாக்குறுதிகளை

கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் இந்த அரசு அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவதற்கு வாக்களித்தனர். கோவிட் பெருந்தொற்றின் முதல் அலை பரவலைக் காட்டிலும் ஐந்து மடங்கு அதிக வீரியத்துடன் இரண்டாம் அலை பரவியிருந்த நேரத்தில் நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றோம். அத்தகைய இக்கட்டான சூழ்நிலையிலும் முதலமைச்சர் பதவியேற்ற முதல் நாளிலேயே ஐந்து தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றினார். அதனைத் தொடர்ந்து மீதமுள்ள தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற ஒரு தொலைநோக்குத் திட்டத்தையும் வகுத்துள்ளார். அதனை அடிப்படையாகக் கொண்டு இந்த அரசு, வரலாறு காணாத வேகத்தில் தேர்தல் வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. இவை மட்டுமின்றி, கடந்த ஆண்டு நடைபெற்ற வரவு- செலவுத் திட்ட சட்டமன்றக் கூட்டத் தொடரில் பல முக்கியமான அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது.


கோவிட் பெருந்தொற்று

பதவியேற்ற நாளிலிருந்து இந்த அரசு கோவிட் பெருந்தொற்று, மழை வெள்ளம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களை சந்திக்க நேர்ந்தது. 2015 ஆம் ஆண்டில் பெய்த மழையால் சென்னை பெரும் பாதிப்புக்குள்ளானது. அதைக்காட்டிலும் 2021 ஆம் ஆண்டில் மாநிலத்தின் பல பகுதிகளில் மிக அதிகமான மழைப்பொழிவு நிகழ்ந்தது. இருப்பினும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் நேரடி நடவடிக்கைகளாலும், கள ஆய்வுகளாலும், இழப்புகளும் இறப்புகளும் கட்டுப்படுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து, கொரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலையை (ஒமிக்ரான்) தமிழ்நாடு சந்தித்தது. இந்த அரசால் இரண்டாம் அலையின் போது ஏற்படுத்தப்பட்ட கூடுதல் மருத்துவக் கட்டமைப்புகளும், கற்றுக்கொண்ட அனுபவத்தின் பயனாலும் மூன்றாவது அலை மிகச்சிறப்பான முறையில் கட்டுப்படுத்தப்பட்டது. எனினும், இந்த எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்கனவே மோசமான நிலையில் இருந்த மாநில நிதிநிலையில் மேலும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியது. எதிர்பாராமல் பெருமளவில் செலவினங்கள் ஏற்பட்ட போதிலும், சிறந்த நிதி நிருவாகத்தையும் நிதி மேலாண்மையையும் அரசு கடைப்பிடித்தது. இதன் பயனாக, மொத்த வரவு - செலவுத் திட்ட மதிப்பீட்டில் வெறும் ஒரு சதவீதம் உயர்வினையே முதல் துணைநிலை மதிப்பீடுகளில் கோரினோம்.


வருவாய் பற்றாக்குறை

2014 ஆம் ஆண்டு முதல், வருவாய்ப் பற்றாக்குறை அச்சுறுத்தும் வகையில் ஆண்டுதோறும் அதிகரித்து வந்துள்ளது. முதன்முறையாக இந்த ஆண்டு இந்த நிலை மாற்றப்பட்டு, 7,000 கோடி ரூபாய்க்கும் மேல் தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை குறைய உள்ளது. மேலும் இந்த சவாலான ஆண்டிலும் நிதிப்பற்றாக்குறை 4.61 சதவீதத்திலிருந்து 3.80 சதவீதமாக குறைய உள்ளது. இந்த அரசின் தீர்க்கமான நடவடிக்கைகளும் நிர்வாகத் திறனுமே இதனை சாத்தியமாக்கியுள்ளது.

சிறப்பு ஆலோசனைக் குழு

ஒன்றிய - மாநில நிதி உறவுகள், தரவு அடிப்படையிலான ஆளுகை (Data Centric Governance), அரசு உடைமைகள் மற்றும் இடர் மேலாண்மை (Asset &Risk Management), அதிக பொறுப்புடைமை மற்றும் உற்ப த்தித்திறன் (Increased Accountability and Productivity), சட்டமன்றத்தின் பங்கினை வலுப்படுத்துதல் ஆகிய ஐந்து முக்கிய முன்னெடுப்புகளை, இந்த அரசு நிருவாகத் திறனை உயர்த்துவதற்காக மேற்கொள்ளும் என்று கடந்த வரவு - செலவுத் திட்டத்தில் குறிப்பிட்டிருந்தோம். இந்த ஒவ்வொரு முன்னெடுப்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக ஒன்றிய - மாநில நிதி உறவுகளை ஆய்வு செய்ய சிறப்பு ஆலோசனைக் குழு அமைத்தல், தரவுத் தூய்மை (data purity) திட்டச் செயலாக்கம், மாநிலத்தின் உள் தணிக்கை அமைப்புகளை சீரமைத்தல் போன்றவை செயல்படுத்தப்பட்டுள்ளன.

அரசின் நெருக்கடி

வரும் நிதியாண்டு மிகவும் இக்கட்டான், பொருளாதார நிச்சயமற்ற தன்மையுடன் இருக்க வாய்ப்புகள் அதிகம். தற்போது உக்ரைனில் நடைபெற்றும் வரும் போரின் காரணமாக உலகளாவிய பொருளாதார மீட்டெடுப்பு தடைபட வாய்ப்புள்ளது. இதனால் நுகர்வு தேவையில் வீழ்ச்சியும் (demand shocks), உலகளாவிய அளிப்பிலுள்ள பாதிப்புகளும் (global supply disruptions), மாநிலப் பொருளாதாரத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தலாம். பணவீக்கம், வட்டி வீதம் ஆகியவை அதிகரிக்குமென் பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும், கோவிட் பெருந்தொற்றின் தாக்கமும் முற்றிலுமாக நீங்கிவிட்டது என்று தற்போது கூற இயலாது. இது மட்டுமின்றி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் முழு இழப்பை அரசு ஏற்பதன் விளைவையும், அகவிலைப்படி உயர்த்தப்பட்டதன் முழு தாக்கத்தையும், கடன் தள்ளுபடியின் தாக்கத்தையும் வரும் நிதியாண்டில் இந்த அரசு சந்திக்க நேரிடும். இத்தகைய நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு, இந்த வரவு - செலவுத் திட்டத்தில் நிதி முன்னுரிமைகளை மாற்றியமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மேற்கூறிய அணுகுமுறையின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய துறைகளுக்கும் திட்டங்களுக்கும் போதிய நிதி வழங்கி, வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் எதிர்பார்ப்புகளையும் நிறைவு செய்யும் விதமாக இந்த வரவு- செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்

சமூகப் பாதுகாப்பினை வலுப்படுத்துதல் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சிறப்புத் திட்டங்கள் வாயிலாக இளைஞர்களுக்கு வேலை பெறும் திறனை அதிகரித்தல் புதிய முதலீடுகளை ஈர்ப்பதன் மூலமும் தற்போதிருக்கும் தொழில்முனைவோரை ஊக்குவிபதன் வாயிலாகவும் அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கப்படும்

மத்திய அரசு

மதிப்புக்கூட்டு வரி நடைமுறையில் இருந்தபோது தமிழ்நாடு அடைந்த வருவாய் வளர்ச்சியை, சரக்கு மற்றும் சேவைவரிச்சட்டம் நடைமுறைக்கு வந்தபின்னர் எட்ட இயலவில்லை. இதுமட்டுமின்றி கோவிட்பெருந் தொற்று அனைத்துமாநிலங்களின் நிதிநிலையை பெருமளவில் பாதித்துள்ளது. இந்நிலையில் சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டை ஒன்றிய அரசு வழங்கும் கால வரையறை 30.6.2022 ஆம் நாளன்று முடிவுக்கு வருகிறது. இதனால் வரும் நிதியாண்டில், சுமார் 20,000 கோடி ரூபாய்நிதி இழப்பினை தமிழ்நாடு சந்திக்க நேரிடும். கொரோனா பெருந்தொற்றினால் ஏற்பட்ட பொருளாதாரத் தேக்க நிலையால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வருவாய் இன்னும் இயல்புநிலைக்குத்திரும் பாததால் இந்த இழப்பீட்டை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்குமாறு ஒன்றிய அரசிற்கு முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார்கள். இந்த நியாயமான கோரிக்கைக்கு ஒன்றிய அரசு செவி சாய்க்கும் என நம்புகிறேன்.

நாட்டின் மக்கள்தொகையில் தமிழ்நாட்டின் பங்கு 6.12 சதவீதமாகும். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏறத்தாழ 10 சதவீதமாகும். இவற்றிற்கு ஏற்ற நிதிப்பகிர்வை மத்திய நிதிக்குழுக்கள் தமிழ்நாட்டிற்கு வழங்கவில்லை. 15வது மத்திய நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி, மாநிலங்களுக்கு இடையேயான நிதிப்பகிர்வில் தமிழ்நாட்டின் பங்கு வெறும் 4.079 சதவீதமாகும். 15வது மத்திய நிதிக்குழு ஐந்தாண்டு காலத்திற்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியமாக மொத்தம் 21,246 கோடி ரூபாயை பரிந்துரைத்துள்ளது. இத்தொகையானது, 14வது நிதிக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட 17,010 கோடி ரூபாய் மானியங்களைக் காட்டிலும் குறைந்த அளவிலேயே அதிகரிக்கப்பட்டுள்ளது. மாநிலத்திற்கு குறிப்பிட்ட மானியங்களையும்,துறைகளுக்கு குறிப்பிட்ட மானியங்களையும் 15வது நிதிக்குழு பரிந்துரைத்துள்ளது. இத்தொகையை நடைமுறையிலுள்ள ஒன்றிய அரசு பொறுப்பேற்கும் திட்டங்களுடனும் (Centrally Sponsored Schemes) ஒன்றிய துறைத் திட்டங்களுடனும் (Central Sector Schemes) இணைக்காமல், தனியாக வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

மாநில நிதிக்குழு

பெருந்தொற்றின் காரணமாக, ஆறாவது மாநில நிதிக் குழுவின் காலவரை இந்த அரசால் ஒன்பது மாதங்கள் நீட்டிக்கப்பட்டது. அண்மையில் இக்குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையின் மீது, அரசு தனது நடவடிக்கை எடுத்த அறிக்கையை (Action Taken Report) விரைவில் இம்மாமன்றத்தில் தாக்கல் செய்யும்.

தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாடு

தமிழ் வேர்ச்சொல் வல்லுநர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைத்து, அகரமுதலி உருவாக்கும் சிறப்புத் திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தும் இத்திட்டத்திற்காக இந்த ஆண்டு வரவு- செலவுத்திட்டத்தில் இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு, 21 இந்திய, உலக மொழிகளில் அச்சு மற்றும் மின்னூல் பதிப்புகளாகவும் வெளியிடப்படும். இப்பணிகள் ஐந்து கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.

தமிழ் வழியில் மட்டும் பாடங்களைக் கற்பிக்கும் பள்ளிகளில் இலவசமாக 1 முதல் 10 ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு , இந்த ஆண்டு முதல் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்.

தொல்லியல் துறை

மாநிலத் தொல்லியல் துறை கடந்த ஆண்டு சிவகங்கை மாவட்டம் கீழடி, தூத்துக்குடி மாவட்டம் சிவகளை, அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை ஆகிய இடங்களில் மேற்கொண்ட அகழாய்வுகளுடன் திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை ஆகிய மூன்று இடங்கள் உட்பட ஏழு இடங்களில் நடப்பாண்டில் அகழாய்வுகளை மேற்கொள்கின்றது. மேலும், புதிய கற்கால இடங்களைத் தேடி 5 மாவட்டங்களில் கள ஆய்வும் (exploration), பொருநை ஆற்றங்கரையில் தொல்லியல் இடங்களைத் தேடிக் கள ஆய்வும் மேற்கொள்ளப்படுகிறது.

இடைச் சங்க கால பாண்டியர்களின் துறைமுகமாக விளங்கிய கொற்கையில் ஆழ்கடலாய்வு மேற்கொள்வதற்கு உகந்த இடத்தினை கண்டறிவதற்கு இந்திய கடல்சார் பல்கலைக் கழகம் மற்றும் தேசிய கடல்சார் தொழில் நுட்பக் கழகத்துடன் இணைந்து இந்த ஆண்டு முன்கள ஆய்வு (reconnaissance) மேற்கொள்ளப்பட உள்ளது. ஏழு இடங்களில் அகழாய்வுப் பணிகள், இரண்டு இடங்களில் கள ஆய்வு மற்றும் கொற்கையில் முன்கள ஆய்வுப்பணிகள் ஐந்து கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளன. பொதுமக்கள், குறிப்பாக மாணவர்களிடையே தமிழ் தொல்லியல் மரபு குறித்து ஆர்வத்தை ஏற்படுத்திடவும், நமது மாநிலத்தில் கிடைத்துள்ள அரும்பொருட்களைப் பேணிப் பாதுகாக்கவும், அருங்காட்சியகங்களும், அகழ்வைப்பகங்களும் (on-site museums) மேம்படுத்தப்பட வேண்டும். இவ்வாண்டு, விழுப்புரம், இராமநாதபுரம் மாவட்டங்களில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அரசு அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும்.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள பழங்குடியினர் அகழ்வைப்பகம், திருவள்ளூர் மாவட்டம் பூண்டியில் உள்ள தொல்பழங்கால அகழ்வைப்பகம், தர்மபுரியில் உள்ள நடுகற்கள் அகழ்வைப்பகம் ஆகியவை 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

மாநிலத்தில் உள்ள பழமையான பொதுக் கட்டடங்களை அவற்றின் தனித்துவம் மாறாமல் புனரமைத்து, பாதுகாக்கும் பொருட்டு இக்கட்டடங்களைச் சீரமைப்பதற்கு இவ்வாண்டு சிறப்பு ஒதுக்கீடாக 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இம்மதிப்பீடுகளில் தமிழ் வளர்ச்சித் துறைக்கு 82.86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை

அரசு நிலங்களில் நில அளவைப் பணிகள் துல்லியமாகவும் எளிதாகவும் மேற்கொள்ள, "தொடர்ந்து இயங்கும் தொடர்பு நிலையங்களின் (Continuously Operating Reference Stations) அமைப்பு"வலுப்படுத்தப்படும். நவீன முறையில் நிலஅளவைப் பணிகளை மேற்கொள்ள நில அளவையர்களுக்கு "ரோவர்" (Rover Machine) கருவிகள் வழங்கப்படும். இத்திட்டத்திற்காக 15 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.

பரவலான சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் அரசு நிலங்களின் பயன்பாடு அமைவது அவசியம். அரசு நிலங்களின் குத்தகை முறையில் தற்போது உள்ள சிக்கல்களைத் தீர்க்கவும், அரசு நிலங்களை நியாயமான், வெளிப்படையான முறையில் குத்தகைக்கு விடுவதற்கும் ஒரு விரிவான நிலக்குத்தகைக் கொள்கை வகுக்கப்படும்.

நீர்நிலைகள் உள்ளிட்ட அரசு நிலங்களை மீட்டெடுக்கவும், பாதுகாப்பதற்கும் அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றது. அரசு நிலங்களைப்பாதுகாப்பதற்கும், பராமரிப்பதற்கும், ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்பதற்கான பணிகளை மேற்கொள்ளவும், சிறப்பு நிதியாக 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை பெருநகரப் பகுதியில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கு தக்க பரிந்துரைகளை வழங்க ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் பரிந்துரைகளின்படி, வெள்ளத்தடுப்புப் பணிகள் முதற்கட்டமாக 1,000 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் என் மாண்புமிகு அவர்கள் அறிவித்தார்கள். இப்பணிகளுக்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் துல்லியமாகக் வானிலையைத் கணிக்க,"பேரிடர் எச்சரிக்கை அமைப்புகளை மேம்படுத்துவதன் அவசியத்தை, அண்மையில் சென்னையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு நமக்கு உணர்த்தியுள்ளது. பேரிடர் தாக்கும் முன், உரிய நேரத்தில் எச்சரிக்கையை வழங்குவதற்கு, வானிலை பலூன் அமைப்பு, இரண்டு வானிலை ரேடார்கள், 100 தானியங்கி வானிலை மையங்கள், 400 தானியங்கி மழைமானிகள், 11 தானியங்கி நீர்மட்டக் கருவிகள், அதிவேகக் கணினிகள் (super computers) உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட ஓர் கட்டமைப்பை அரசு உருவாக்கும். இப்பணிகளுக்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சமுதாயத்தில் விளிம்பு நிலையில் உள்ளோரின் நலனிற்காக அரசால் செயல்படுத்தப்படும் முதியோர் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற விதவை ஓய்வூதியத் திட்டம், மாற்றுத்திறனாளி ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்காக 4,816 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சமூக ஊடகசிறப்புமையம்

இம்மதிப்பீடுகளில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைக்கு 7,474.94 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காவல் சட்டம் ஒழுங்கைத்திறம்பட நிலைநாட்டுவதன் வாயிலாக தமிழ்நாடு ஓர் அமைதிப்பூங்காவாகத் திகழ்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போதைப்பொருட்களின் பயன்பாடு ஆகியவற்றைத்தடுப்பதற்கு இந்த அரசு தீவிரமுயற்சிகள் எடுத்துவருகின்றது. வளர்ந்து வரும் புறநகர்ப்பகுதிகளில் காவல்துறை திறம்படச் செயலாற்றிட, சென்னை காவல் ஆணையரகம் மூன்றாகப்பிரிக்கப்பட்டு ஆவடியிலும் தாம்பரத்திலும் இரண்டு புதிய ஆணையரகங்கள் சிறப்பாகச் செயல்பட்டுவருகின்றன. மேலும், இத்துறைக்குத் தேவைப்படும் அனைத்துக் கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்படும். இந்த வகையில், சமூக ஊடகங்களில் செய்யப்படும் தவறான பிரச்சாரங்களின் விளைவாக, அதிகரித்து வரும் குற்றச்செயல்களைத்தடுத்திட, "சமூக ஊடகசிறப்புமையம்" அமைக்கப்படும். இம்மதிப்பீடுகளில் காவல்துறைக்கு 10,285.22 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

தீயணைப்புமற்றும் மீட்புப் பணிகள் துறை

தீவிபத்துக்களைத் தவிர்ப்பதை இலக்காகக்கொண்டு , தீயணைப்புமற்றும் மீட்புப் பணிகள் துறையை நவீனமயமாக்குவதற்கான நடவடிக்கைகளை அரசுமேற்கொண்டு வருகிறது. 2021 ஆம் ஆண்டில், இத்துறைமொத்தமாக 16,809 தீ விபத்து அழைப்புகள் மற்றும், 57,451 மீட்புப்பணி அழைப்புகளை ஏற்று, எண்ணற்ற மனித உயிர்களையும், கால்நடைமற்றும் உடைமைகளையும் காப்பாற்றியுள்ளது. இம்மதிப்பீட்டில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்காக 496.52 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

நீதி நிருவாகம்

வழக்குகளை விரைந்து முடித்து, தாமதமின்றி தீர் ப்புகளை வழங்கிட நீதித்துறைக்கு அனைத்து ஆதரவையும் இந்த அரசு வழங்குகின்றது. வணிக வழக்குகளை விசாரிப்பதற்கென ஏழு வணிகநீதி மன்றங்கள் அமைத்திட , இந்த நிதியாண்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இம்மதிப்பீட்டில் நீதிநிருவாகத் துறைக்கென் 1,461.97 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு

பயிர்க்கடன் தள்ளுபடிக்காக 2,531 கோடி ரூபாயும், நகைக்கடன் தள்ளுபடிக்காக 1,000 கோடி ரூபாயும், சுய உதவிக்குழுக்களின் கடன்கள் தள்ளுபடிக்காக 600கோடி ரூபாயும் எனஇம்மதிப்பீட்டில் மொத்தம் 4,131 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில், இதுவரை 14,15,916 விவசாயிகளுக்கு 9,773 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 10,76,096 குறு, சிறு விவசாயிகளுக்கு 7,428 கோடி ரூபாய் மதிப்பில் வழங்கப்பட்ட பயிர்க்கடன்களும் அடங்கும். நாட்டிலேயே முதல்முறையாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு, இந்த வரவு- செலவுத் திட்டத்தில் 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொது விநியோகத் திட்டத்தைச் செயல்படுத்த வரவு- செலவுத் திட்டத்தில் உணவு மானியமாக 7,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இம்மதிப்பீட்டில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு 13,176.34 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பாசனம்

நடப்பாண்டில் கால்வாய்கள், ஏரிகள், நீர்நிலைகளையும் நீர் வழித்தடங்களையும் மறுசீரமைத்தல், தடுப்பணைகள், கதவணைகள், தரைகீழ் தடுப்பணைகள் போன்ற நிலத்தடி நீர் செறிவூட்டும் கட்டமைப்புகளை ஏற்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக, இம்மதிப்பீடுகளில் 2,787 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீர்வளங்களின் பயன்பாட்டுத் திறனை அதிகரிக்கவும், சிறப்பாக மேலாண்மை செய்வதற்காகவும், பாசனத்திற்காக நீரை தங்குதடையின்றி வழங்குவதற்காகவும், 3,384 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி வடிநிலப் பகுதியில் உள்ள பாசன அமைப்புகளில் நீட்டித்தல், புனரமைத்தல், நவீனமயமாக்குதல் போன்ற பணிகள் (ERM) விரைவில் தொடங்கப்பட உள்ளன.

சாத்தனூர், சோலையார், மேட்டூர், பாபநாசம் உள்ளிட்ட 64 பெரிய அணைகளை புனரமைக்கவும், அணைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்தவும் இரண்டாம் அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு (DRIP-II) திட்டத்திற்கு அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உலக வங்கி மற்றும் ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உதவியுடன் 1,064 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்காக, இம்மதிப்பீடுகளில் 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வரும் குறுவை சாகுபடிக்கு கடைமடைப் பகுதிகள் வரை காவிரி நீர் சென்றடைய, டெல்டா பகுதியிலுள்ள 10 மாவட்டங்களில் 80 கோடி ரூபாய் செலவில் 4,964கிலோமீட்டர்நீளமுள்ள கால்வாய்களை தூர்வாரும் சிறப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்புதலை இந்த அரசு அளித்து ள்ளது. இவ்வாண்டு முன்கூட்டியே திட்டமிடுதல் மூலம், பாசனத்திற்காக மேட்டூர் அணை திறப்பதற்கு முன்னரே இந்தப் பணிகள் துரிதமாக நிறைவேற்றப்படும். இம்மதிப்பீடுகளில் நீர்வளத் துறைக்கு 7,338.36 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கால்நடைப் பராமரிப்பு

"வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்" என்று பல்லுயிர் ஓம்பிய வள்ளலார் அவர்களின் 200வது பிறந்த ஆண்டை முன்னிட்டு, ஆதரவில்லாத கைவிடப்பட்ட, காயமடைந்த வளர்ப்புப் பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளைப்பராமரிக்கும் அரசுசாரா நிறுவனங்கள், சேவை நிறுவனங்களுக்கு உதவியளிப்பதற்கு "வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்" என்னும் புதிய திட்டம் வரும் நிதியாண்டில் தொடங்கப்படும். இத்திட்டத்திற்காக 20 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.

இம்மதிப்பீடுகளில் கால்நடை பராமரிப்புத் துறைக்கு 1,314.84 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனம் தாவரவியல் பூங்காக்கள், பல்லுயிரினங்களின் இருப்பிடங்களாகவும், பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு மையங்களாகவும் திகழ்கின்றன. இதனைக் கருத்தில் கொண்டு , லண்டன் க்யூபூங்கா (Kew Gardens) அமைப்புடன் இணைந்து சென்னைக்கு அருகில் தாவரவியல் பூங்கா 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை இவ்வாண்டு தயாரிக்கப்படும்.

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும் இடர் தணிக்கும் திட்டங்கள் மற்றும் பசுமையாக்கும் திட்டங்களுக்கு போதிய நிதியினை அளித்திடவும், "தமிழ்நாடு பசுமைக் காலநிலை மாற்ற நிதியத்தை" அரசு உருவாக்கும். இந்நிதியத்தின் மூலம், வளர்ச்சி நிதி நிறுவனங்கள், பன்னாட்டு காலநிலை மாற்ற நிதியங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களிலிருந்து நிதி திரட்டப்படும்.

தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடுகளைப் பாதுகாத்தல், அவற்றின் வாழ்விடத்தை விரிவுபடுத்துதல், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற நோக்கங்களுடன் "வரையாடு பாதுகாப்புத் திட்டத்தை" அரசு செயல்படுத்தும். இத்திட்டத்திற்கு முதற்கட்டமாக 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இளம் வயதிலிருந்தே வனம் மற்றும் வன விலங்குகளைப் பற்றிய விழிப்புணர்வைக் குழந்தைகளுக்கு ஏற்படுத்த, கிண்டி குழந்தைகள் பூங்காவை மறுவடிவமைத்து, பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள், விலங்குகள் உள்ளடங்கிய இயற்கைப் பூங்காவாக 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைத்திட அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை இந்த ஆண்டில் தயாரிக்கப்படும்.

வனப் பாதுகாப்பு, பசுமைப் பரப்பை அதிகரித்தல், வன மேலாண்மையில் பழங்குடியினரை ஈடுபடுத்துதல், மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையேயான மோதல்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள், வனத்துறையில் திறன் மேம்பாடு குறித்த கொள்கை மாற்றங்கள் ஆகியவற்றை அரசிற்குப் பரிந்துரைக்க வன் ஆணையம் ஒன்றை அரசு அமைக்கும்.

அணிநிழல் காடுகளும், எழில்மிகு சூழல் சுற்றுலா தலங்களும் நிறைந்தது தமிழ்நாடு. வனங்களுக்குப் பாதகமின்றி சுற்றுச்சூழல் சுற்றுலாவை (Eco-Tourism) ஊக்குவிப்பது அரசின் கொள்கையாகும். இதன் அடிப்படையில், சேத்துமடை (கோயம்புத்தூர் மாவட்டம்), மணவனூர் மற்றும் தடியன் குடிசை (திண்டுக்கல் மாவட்டம்), ஏலகிரி (திருப்பத்தூர் மாவட்டம் ) ஆகிய பகுதிகள் சூழல் சுற்றுலாத் தலங்களாக தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தப்படும். தங்கும் இடங்கள், வனங்களைப் பற்றிய விழிப்புணர்வு மையங்கள் போன்ற பல வசதிகள் இத்தலங்களில் ஏற்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் வரும் வருவாய் அப்பகுதியின் வளர்ச்சிக்காகச் செலவிடப்படும். இம்மதிப்பீடுகளில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறைக்கு 849.21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித் துறை

கடந்த இரண்டு ஆண்டுகள் பெருந்தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டிருந்ததன் காரணமாக, மாணவர்களிடையே ஏற்பட்ட கற்றல் இழப்பை ஈடுசெய்யும் வகையில் "இல்லம் தேடிக் கல்வி" என்ற சிறப்பான முன்னோடிக் கல்வித் திட்டம் 38 மாவட்டங்களில் 1.8 இலட்சம் தன்னார்வலர்களைக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் நமதுநாட்டிற்கே ஒரு முன்னோடியாகத் திகழ்கிறது. இதன் வாயிலாக 30 இலட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக பெருந்தொற்றால் பெருமளவில் கல்வி கற்றலில் இழப்பு ஏற்பட்டுள்ளதால், இத்திட்டம் வரும் நிதியாண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இதற்காக, 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

அரசுப் பள்ளி மாணவர்கள், புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் STEAM - அதாவது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கலை மற்றும் மருத்துவம் போன்ற பிரிவுகளில் சேர்ந்து, கல்வி பெற உதவும் நோக்கோடு, கல்வியில் பின்தங்கியுள்ள 10 மாவட்டங்களில் முன்மாதிரிப்

பள்ளிகளை இந்த தொடங்கியுள்ளது. வரும் நிதியாண்டில் மேலும் மாவட்டங்களில் இத்தகைய முன்மாதிரிப்பள்ளிகள் (Model Schools) தொடங்கப்படும். இத்திட்டத்திற்காக 125 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

அரசு அடுத்த ஐந்து ஆண்டுகளில் அனைத்து அரசுப் பள்ளிகளை (ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் உட்பட) நவீனமயமாக்குவதற்கான பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்' என்ற மாபெரும் திட்டத்தை அரசு செயல்படுத்தும். இத்திட்டத்தில், அரசுப் பள்ளிகளில், தேவையான கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய 18,000 புதிய வகுப்பறைகள் கட்டப்படும். மேலும், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, தொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகளும் (smart classrooms), இதரப் பள்ளிகளில் அதிநவீன கணினி ஆய்வகங்களும் உருவாக்கப்படும். அடுத்த ஐந்து ஆண்டுகளில், இத்திட்டங்கள் படிப்படியாக 7,000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும். வரும் நிதியாண்டில் 1,300 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

மாநிலத்தில் இயங்கி வரும் பொது நூலகங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்து, மேம்படுத்தத் தேவையான ஆலோசனைகள் வழங்க ஓர் உயர்மட்டக் குழுவை அரசு அமைத்துள்ளது. புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட ஆறு மாவட்டங்களில், 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் உயர்தர வசதிகளுடன்கூடிய மாவட்ட மத்திய நூலகங்கள் அரசால் ஏற்படுத்தப்படும். இந்நூலகக் கட்டடங்களுக்கு தமிழ் அறிஞர்களின் பெயர்கள் சூட்டப்படும்.

சமுதாயத்தை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவதில் புத்தக வாசிப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல, சென்னை புத்தகக்காட்சி போன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக்காட்சிகள் நடத்தப்படும். இத்துடன் இலக்கியச் செழுமை மிக்க தமிழ்மொழியின் இலக்கிய மரபுகளைக் கொண்டாடும் வகையில், ஆண்டுக்கு நான்கு இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படும். புத்தகக்காட்சிகள் மற்றும் இலக்கியத் திருவிழாக்கள் வரும் ஆண்டில் 5.6 கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும். இம்மதிப்பீடுகளில் பள்ளிக்கல்வித் துறைக்கு 36,895.89 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. என்று நிதி அமைச்சர் தனது உரையில் தெரிவித்தார்.

Tags

Next Story
உலகத்திலேயே அதிகமாக  இந்தியர்களுக்கு இதனால்தான் சுகர் வருதாம் ...! கவனமா படிங்க ...!