தமிழக பட்ஜெட் 2022-23 நாளை தாக்கல்: எதிர்பார்ப்புகள் என்ன?

எம்.எல்.ஏ.க்கள் இருக்கைகள் முன்பாக வைக்கப்பட்டிருக்கும் டேப்லெட்டில் பட்ஜெட் விவரங்களை பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது
2022-2023 ஆம் ஆண்டுக்கான முழுமையான நிதிநிலை அறிக்கை ஜார்ஜ் கோட்டையில் இருக்கக்கூடிய சட்டமன்ற அரங்கில் நாளை தாக்கல் செய்யப்படவிருக்கிறது.
காகிதமில்லா சட்டப்பேரவை திட்டத்தின் கீழ் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் இருக்கைக்கு முன்பாகவும், கணினி வைக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 10 மணிக்கு கூடும் சட்டமன்ற கூட்டத்தில் நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யவுள்ளார். தொடர்ந்து அலுவல் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு எத்தனை நாட்கள் நடத்தப்படும் என்பது குறித்து முடிவெடுக்கப்படுவதுடன், மானிய கோரிக்கை மீதான விவாதத்தை எப்போது நடத்துவது என்பது குறித்தும் முடிவெடுக்கப்படவுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் உலகையே புரட்டி போட்ட கொரோனா பெருந்தொற்றால் தொழில்துறை, சினிமா துறை, சுற்றுலா துறை என பல துறைகள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. கொரோனா காரணமாக வருவாய் பற்றாக்குறை அதிகரிக்க வாய்ப்புள்ள நிலையில், வரும் நிதியாண்டில் அதை குறைப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில்வளம் அதிகமாக உள்ள மாவட்டங்களில் ஒன்றான கோவை மாவட்டத்தில் முடங்கிய தொழில்களை மீட்டு கொண்டு வர தாட்கோ வங்கிகள் மூலம் எளிய முறையில் கடன் வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கோடைக்காலம் நெருங்கி வரும் நிலையில் மின்சார தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் தொழிற்சாலைகள் இயங்குவதில் சிரமம் உள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் அவ்வப்போது அறிவிக்கப்படாத மின் வெட்டு இருந்ததாக விமர்சனங்கள் உண்டு. எனவே மின்வெட்டை தவிர்க்கும் வகையில் காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின்சாரம் உள்ளிட்ட மாற்றுத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படலாம்
தமிழக அரசைப் பொறுத்தவரை, பத்திரப்பதிவு, வணிகவரி, ஆயத்தீர்வை வருவாயை பெருமளவு நம்பியுள்ளது. ஒரே நாடு ஒரேபதிவு முறை அமல்படுத்தப்படும் பட்சத்தில் பத்திரப்பதிவு வருவாய் குறைய வாய்ப்புள்ளது. இதைச் சரிகட்டி, வரி வருவாயைப் பெருக்கும் வகையில் புதிய திட்டங்களும் நிதிநிலை அறிக்கையில் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இம்மாதம் 5-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூடி, நிதிநிலை அறிக்கை திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியது. அப்போது, மாதந்தோறும் மின்கட்டண முறையை அமல்படுத்துவது குறித்து, முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்ததுடன், அதை அமல்படுத்தினால் இழப்பு ஏற்படுமா என்றும் அதிகாரிகளிடம் கேட்டுள்ளார்.
மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கிடுவது என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி குறித்த அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறலாம்.
மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இவை தொடர்பான அறிவிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu