தமிழக அரசு போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் கட்டாயம்
தமிழக அரசு பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயமாக்கப்படும் என கடந்த செப்டம்பர் மாதம் தமிழக சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக அரசு துறைகளில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞர்களை 100 சதவீதம் நியமனம் செய்யும் பொருட்டு, தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தாளினை அறிமுகம் செய்வதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டது.
இது குறித்து வெளியிடப்பட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது;
- அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயம். தற்போது நடைமுறையிலுள்ள பொதுத்தமிழ், பொது ஆங்கிலம் உள்ள தேர்வுகளில், பொது ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டு, பொது தமிழ் தாள் மட்டுமே மதிப்பீட்டுத் தேர்வாக அமைக்கப்படும்.
- தமிழ் மொழித் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு தரத்தில் நிர்ணயம் செய்யப்படும் .
- கட்டாய தமிழ்மொழித் தாளில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் தேர்ச்சி கட்டாயமாக்கப்படுகிறது. தேர்ச்சி பெறாதவர்களின் இதர தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படமாட்டாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குரூப் 2, குரூப் 2 ஏ ஆகிய இரண்டு பிரிவு பணியிடங்களுக்கு இனி ஒரே மாதிரியான தேர்வு நடத்தப்படும். இந்த இரு பிரிவுகளுக்கும் முதனிலை மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வுகளை கொண்டதாக மாற்றப்பட்டுள்ளது.
இரண்டு பணியிடங்களுக்கும் தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்படுவதால் தேவையற்ற காலவிரயமும் வரிப்பணமும் வீணாகிறது. இதை கருத்தில் கொண்டு இரண்டுக்கும் சேர்த்து ஒரே தேர்வாக நடத்த நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu