சென்னையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் பொன்விழா வெற்றி தினக் கொண்டாட்டம்

சென்னையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் பொன்விழா வெற்றி தினக் கொண்டாட்டம்
X
1971-ஆம் ஆண்டு போரில் இந்திய ராணுவம் பெற்ற வெற்றியை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 16 வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது.

பொன்விழா வெற்றி ஆண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் இன்று (16.12.2021) நடத்தப்பட்ட விழாவில், 1971 ஆம் ஆண்டு போரில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.


ராணுவத்தின் தென்னிந்திய தலைமை அதிகாரி லெஃப்டினன்ட் ஜெனரல் ஜெ.அருண் மற்றும் மூத்த அதிகாரிகள், முப்படை அதிகாரிகள் ஆகியோரும் இங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.


இந்த விழாவில் 1971-ஆம் ஆண்டு போரில் பங்கேற்ற முன்னாள் வீரர்கள் பலரும் கலந்து கொண்டனர். 1971-ஆம் ஆண்டு போருக்காக வீர் சக்கரா விருது பெற்ற அட்மிரல் எஸ் ராம்சாகர் மற்றும் கர்னல் ஏ கிருஷ்ணசாமி ஆகியோரும் இந்த விழாவில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.


இந்த நிகழ்ச்சியில் வீராங்கனைகள் (1971-ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் கணவனை இழந்தோர்) பங்கேற்க தென்னிந்திய ராணுவத் தலைமையகம் சிறப்பு அழைப்பு விடுத்திருந்தது.

இந்நாளில் பாகிஸ்தான் வீரர்கள் 93,000 பேர் சரணடைந்தனர். இதன் மூலம் பங்களாதேஷூக்கு விடுதலை கிடைத்தது. இந்த ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி, வரலாற்றுச் சிறப்பு மிக்க பொன்விழா ஆண்டாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

அதேபோல், சென்னை காமராஜர் சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னம் பொது மக்களுக்காக டிசம்பர் 16-ம் தேதி காலை 10 மணி முதல் டிசம்பர் 19ம் தேதி மாலை 5 மணி வரை திறந்திருக்கும். 1971ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்தலாம். விருப்பம் உள்ள பொதுமக்கள் போர் நினைவுச் சின்னத்தில் மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தலாம்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!