திருச்செந்தூர் கோயிலில் சூரசம்ஹார விழா: பக்தர்கள் இன்றி நடந்தது

திருச்செந்தூர்- அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 4ம் தேதி கந்தசஷ்டி விழா துவங்கியது. விழாவின் 6ம் நாளான இன்று (நவ.9ம் தேதி) சூரசம்ஹார விழா நடந்தது.

இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூபதீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.

தொடர்ந்து மாலை 4.45 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளினார். தொடர்ந்து சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. 5.15 மணிக்கு கஜமுகன் தலையும், 5.22 மணிக்கு சிம்ம தலையும், 5.30 மணிக்கு சூரன்தலையும் சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து 5.38 மணிக்கு சூரபத்மன் சேவலாக மாறிய நிகழ்ச்சியும் நடந்தது.

சூரசம்ஹார விழாவை காண பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் கோயில் பக்தர்கள் கூட்டம் இல்லாமல் எங்கு பார்த்தாலும் போலீசாரின் தலைகளே தெரிந்தது. பக்தர்கள் இல்லாத விழாவுக்கு பாதுகாப்புக்கு 2 ஆயிரம் போலீசார் எதற்கு என்று பக்தர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். திருச்செந்தூர் முழுவதும் அனைத்து தெருக்களிலும் பேரி கார்டை வைத்து அடைத்து வைத்ததால் உள்ளூர் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இதனால் மருத்துவமனைக்கு ஆட்டோவுக்கு செல்லக்கூட போலீசார் அனுமதி மறுத்ததால் பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. பக்தர்கள் சூரசம்ஹார விழாவை காண தடை விதித்ததால் ஏராளமான போலீசார் சூரசம்ஹார விழாவை காண குவிந்ததாக பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu