உச்சநீதிமன்றத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு
எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம்
அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை நவம்பர் 30-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அ.தி.மு.க.வில் இணை ஒருங்கிணைப்பாளராகவும், தமிழக முதல் அமைச்சராகவும் எடப்பாடி பழனிசாமியும், ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வமும் செயல்பட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்ததால் ஓ.பி.எஸ்- இ.பி.எஸ். இடையே பிரச்சினை ஏற்பட்டது. இந்நிலையில் ஒற்றைத்தலைமை விவகாரத்தை எடப்பாடி பழனிசாமி கையில் எடுத்தார். இதனால் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி பெரும்பாலான அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் அந்த கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே நீக்கம் செய்வதாகவும் அறிவித்தார்.
இதற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் தனி நீதிபதி ஜெயச்சந்திரன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என தீர்ப்பு அளித்தார். இதற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டின் இரு நீதிபதிகள் அமர்வு தனி நீதிபதி அளித்த தீர்ப்பினை ரத்து செய்தும், எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்றும் தீர்ப்பளித்தது.
இதனை ஓ பன்னீர் செல்வம் தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை. உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வமும், வைரமுத்து என்பவரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சுதான்சு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. பொதுக்கு குழு விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி கடந்த வாரம் பதில் மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த பதில் மனுவுக்கு விளக்க மனு தாக்கல் செய்யும் வகையில் விசாரணையை தள்ளி வைக்க வேண்டுமென வைரமுத்து சார்பில் ஆஜரான வக்கீல் கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக கோரிக்கை கடிதம் அளிக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகளிடம் தெரிவித்த போது, நீதிபதிகள் அது தொடர்பான கோரிக்கை கடிதம் எங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் விசாரணையை தள்ளி வைக்க கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் அளிக்கப்பட்ட கடிதம் மட்டுமே தங்களுக்கு கிடைத்ததாகவும் அதன் வாயிலாகத்தான் தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை கடிதத்தை நாங்கள் அறிந்து கொண்டோம் என்றும் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான வக்கீல்கள், சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகள் காரணமாக, திருத்தப்பட்ட அ.தி.மு.க. விதிகளை தேர்தல் ஆணையம் வெளியிட மறுக்கிறது என்ற வாதத்தை முன் வைத்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நவம்பர் 30-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர். அதற்குள் விளக்க மனு தாக்கல் செய்யவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu