முல்லைப்பெரியாறு அணையில் நிலநடுக்கத்தை கண்டறியும் கருவி பொருத்தம்
பைல் படம்.
தேனி மாவட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாய ஆதாரமாகவும் உள்ளது முல்லைப்பெரியாறு அணை. இந்த ஆணை பலவீனமாக உள்ளது என கேரள அரசு குற்றம் சாட்டி வந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் மூலம் அணையின் உறுதித்தன்மை நிரூபிக்கப்பட்டது. அதன் பின்பும் கேரள அரசு தொடர்ந்து நிலநடுக்கம் மற்றும் நில அதிர்வால் அணைக்கு பாதிப்பு உள்ளது என ஒரு பொய்யான குற்றச்சாட்டை கூறிவந்தது.
இதனால் முல்லைப்பெரியாறு அணையில் நிலநடுக்கம் மற்றும் நில அதிர்வுகளை கண்காணிக்க நில அதிர்வுமாணிகள் பொருத்த கேரளா கண்காணிப்பு குழுவை வலியுறுத்தியது. இதையடுத்து, கடந்த ஜூன் மாதம் டெல்லியில் நடைபெற்ற மேற்பார்வைக் குழுவின் கூட்டத்தில் முல்லைப் பெரியாறு அணையில் நில அதிர்வு கண்காணிப்பு கருவிகள் பொருத்துவது குறித்து கேரளாவின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதையடுத்து கடந்த ஜூன் இறுதியில் முல்லை பெரியாறு அணையில் நில அதிர்வு மற்றும் நிலநடுக்கத்தை அளவிடும் சீஸ்மோகிராப் மற்றும் ஆக்சலரோகிராப் கருவிகள் வாங்க ரூ. 99.95 லட்சம் நிதி தமிழக பொதுப்பணித்துறைக்கு ஒதுக்கப்பட்டது.
கருவிகளை பொருத்தும் பணியை செய்து முடிக்க ஹைதராபாத்தைச் சேர்ந்த மத்திய அரசின் தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிலைய (என்ஜிஆர்ஐ) விஞ்ஞானிகள் விஜயராகவன், சேகர் ஆகியோர் முல்லைபெரியாறு அணையில் சீஸ்மோகிராப் மற்றும் ஆக்சலரோகிராப் கருவிகள் பொருத்துவதற்கான இடம் குறித்து ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், நேற்று முல்லைபெரியாறு அணையில் நிலஅதிர்வு மாணிகள் மற்றும் அவை பொருத்தும் பணிக்கான மராமத்து பொருட்களை தமிழக பொதுப் பணித் துறை அதிகாரிகள் செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், உதவிப் பொறியாளர் ராஜகோபால் அணைக்கு கொண்டு சென்றனர். அவர்களுடன் என்ஜிஆர்ஐ விஞ்ஞானி சேகர் உடன் சென்றுள்ளார். இன்று மூத்த விஞ்ஞானி விஜயராகவன் தலைமையில் அணைப் பகுதியில் 3 இடங்களில் நிலஅதிர்வு மாணி பொருத்துகின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ஆக்சலரோகிராப் கருவி அணையின் மேல் பகுதியிலும், அணை கேலரி பகுதியிலும் (சுரங்கப் பகுதி), அதேபோல சீஸ்மோகிராப் கருவி பெரியாறு அணை கேம்பிலும் பொருத்தப்பட உள்ளது. மேலும் இது இரு மாநிலத்திற்கான பிரச்சனை என்பதால் இங்கு அமைக்கப்படும் நில அதிர்வுமாணியின் அறிக்கை ஒவ்வொரு 15 நொடிக்கும் ஹைதராபாத்தில் உள்ள தேசிய புவி இயற்பியல் நிலநடுக்க ஆய்வுக் குழுவிற்கு தகவல் செல்லும் வகையிலும், ஐந்து ஆண்டு ஒப்பந்தத்துடன் அமைக்கப்படுகிறது என்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu