அரசு பள்ளி பொருட்களை மாணவர்கள் அடித்து நொறுக்கிய விவகாரம்: 5 மாணவர்கள் சஸ்பெண்ட்

அரசு பள்ளி பொருட்களை மாணவர்கள் அடித்து நொறுக்கிய விவகாரம்: 5 மாணவர்கள் சஸ்பெண்ட்
X

பள்ளி மேசை நாற்காலிகளை மாணவர்கள் அடித்து நொறுக்கும் காட்சி

அரசு பள்ளி பொருட்களை மாணவர்கள் அடித்து நொறுக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியில் விசாரணை நடத்தினர்

தர்மபுரி மாவட்டம் அ.மல்லாபுரத்தில் செயல்பட்டுவரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். 40 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த பள்ளியில் கடந்த வாரம் அரசு பொதுத்தேர்வு எழுதும் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தொடங்கியது.

இந்த தேர்வுகள் முடிவடைந்ததை தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகள் ஒரு வகுப்பறையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சில மாணவர்கள் வகுப்பறையில் இருந்த மேஜை, நாற்காலிகளை தூக்கி வீசியதோடு, கம்பால் மின்விசிறிகள், சுவிட்ச் போர்டு ஆகியவற்றை அடித்து நொறுக்கினர். மாணவர்களுக்கு நாங்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பது போல் மாணவிகளும் மேஜை, நாற்காலிகளை சேதப்படுத்தினர்.

இதுகுறித்து அறிந்த பள்ளி தலைமை ஆசிரியர், ரகளையில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து நடந்த சம்பவங்களை கூறினார். பின்னர் பள்ளியில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டோம் என்று மாணவ-மாணவிகளிடம் எழுதி வாங்கப்பட்டது.

இந்நிலையில் மாணவ-மாணவிகள் ரகளையில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அறிந்த கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியில் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் கூறுகையில், அ.மல்லாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறையில் மேஜை, நாற்காலிகளை மாணவ-மாணவிகள் அடித்து சேதப்படுத்தியது தொடர்பாக அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மாணவ-மாணவிகள் இவ்வாறு நடந்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணையில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இந்தநிலையில், தருமபுரி மாவட்டம் அ.மல்லாபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் வகுப்பறை பொருட்கள் சேதப்படுத்திய விவகாரத்தில் 5 மாணவர், மாணவிகளை 5 நாள் இடை நீக்கம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வீடியோ குறித்து விசாரணை மேற்கொண்ட கல்வித்துறை, 5 மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானதால் பெற்றோர், கல்வியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வீடியோ குறித்து விசாரணை மேற்கொண்ட கல்வித்துறை, 5 மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.

Tags

Next Story
மக்களே உஷார் ....! மழைக்காலத்துல பல நோய்கள் வருதாம் !... அத எதிர்கொள்ள உங்களுக்காக சில டிப்ஸ்....