மாணவர் ஒழுக்கம்: பெற்றோர்களுக்கும் பொறுப்பிருக்கிறது
தேனிமாவட்டம், தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், தங்களை கத்தியால் குத்த முயன்ற மாணவர் குறித்து காவல்துறையில் புகார் அளித்தனர் ஆசிரியர்கள். விருதுநகரில் 'ஏன் லேட்' என்று கேட்டதற்கு ஆசிரியரை கத்தியால் குத்திவிட்டான் ஒரு மாணவன். திருப்பத்தூரிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியின் தலைமையாசிரியரை கத்தியால் குத்திவிட்டான் ஒரு மாணவன்
சிறு வயதிலேயே தங்கள் சாதி மாணவர்களுடன் சேர்ந்துகொண்டு பிற சாதி மாணவர்களுடன் பள்ளியில் மோதும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன.
இதற்கெல்லாம் காரணம் என்ன? சட்டம்தான் காரணமா? அல்லது பெற்றோர்கள் தங்கள் பொறுப்பை தட்டிக் கழிப்பதா?
அந்த காலத்தில் வீட்டில் மூன்று அல்லது நான்கு குழந்தைகள் இருக்கும். தற்போது ஒன்னே ஒண்ணு கண்ணே கண்ணு என வளர்ப்பதால் கண்டிக்க பெற்றோர் தயங்குகின்றனர். வீட்டிற்கு அடங்காத பிள்ளை வெளியில் அடங்கும் என்பார்கள். ஆனால், தேனி மாணவர் பேசிய வீடியோவை பார்க்கும்போது, வெளியில் மட்டுமல்ல காவல்துறைக்கே அடங்க மாட்டான் என்பது தெரிகிறது. அவனது உறவினர்கள் முன்னிலையிலேயே யாரையும் மதிக்காமல் அவன் பேசியது, ஒரு தனிப்பட்ட மாணவன் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, சமுதாயம் சம்பந்தப்பட்டது.
அந்தக் காலத்தில் ஆசிரியர்கள் கையில் பிரம்பு இருக்கும். அவர்களைப் பார்த்தாலே மாணவர்களுக்கு பயமும், மரியாதையும் வரும். ஆனால் 'மாணவர்களை அடிக்கும் ஆசிரியருக்கு 3 வருடங்கள் சிறை அல்லது அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்' என்ற சட்டம் வந்த பிறகுதான் நிலைமை தலைகீழ் ஆனது.
நமக்கு ஏன் வம்பு என மாணவர்களைக் கண்டிப்பதை ஆசிரியர் நிறுத்தி விட்டனர். இதை சாதகமாக பயன்படுத்தி மாணவர்கள் பலர் அடாவடி செய்ய தங்களுக்குக் கிடைத்த உரிமையாக நினைக்க ஆரம்பித்துவிட்டனர். இதனால் அவர்கள் பள்ளியில் எவரையும் மதிப்பதில்லை. ஆசிரியரைக் கண்டு மாணவர்கள் பயந்த காலம் போய், மாணவர்களைக் கண்டு ஆசிரியர்கள் பயப்படும் காலமாகிவிட்டது. மாணவர்களின் அடாவடிக்கு, ஒழுக்கமின்மைக்கு இதுவே காரணம்
இளம் பருவத்தில் எது சரி, எது தவறென்று தெரியாது. அந்த நேரத்தில் வீட்டுக்கு, தாய் தந்தைக்கு அடங்காத பிள்ளைகளுக்கு கண்டிப்பான ஒரு உறவு தேவை. அவர்தான் ஆசிரியர்.
ஆசிரியர் பணி என்பது வெறும் வேலை அல்ல. அது புனிதமான உறவு. அதனால்தான், 70-80 காலகட்டத்தில் தங்கள் பிள்ளைகளைப் பற்றி ஆசிரியரிடம் உரிமையுடன் புகார் சொல்வார்கள் பெற்றோர்கள். அதுவும், 'கண்ணை மட்டும் விட்டுடுங்க, தோலை உரிங்க சார்' என்ற வார்த்தைகள் ரொம்பவே பிரபலம்.
அதுவும் ஆசிரியர் அடித்தால், வீட்டில் சொல்லவும் முடியாது. 'நீ என்ன தப்பு செஞ்ச?' என வீட்டிலும் அடி விழும். அந்த அளவிற்கு ஆசிரியர்களை மதித்தனர். அதற்காக ஆசிரியர் மாணவர்களை அந்த அளவு அடிப்பதில்லை. கண்டிக்கவே செய்வார்கள்.
ஆனால் இப்போது, தவறு செய்யும் மாணவர்களைக் கண்டித்தாலே, அவர்களது பெற்றோர் பள்ளிக்கு வந்து, 'என் பிள்ளையை நானே கண்டித்ததில்லை. நீங்கள் யார் கண்டிக்க?' என கேட்டு ஆசிரியர்களை உண்டு இல்லை என ஆக்கி விடுகிறார்கள். தவிர சட்டமும் ஆசிரியர்களுக்கு எதிராக வந்துவிட்டதால் மாணவர்களைக் கண்டிக்கவே ஆசிரியர்களுக்கு அச்சமாக இருக்கிறது.
ஆசிரியர்கள் மட்டுமல்ல, பெற்றோர்கூடத் தங்கள் பிள்ளைகளை அடிக்கக் கூடாது என்னும் பார்வை வலுப்பெற்றுவரும் காலம் இது. இந்தக் காலத்திலும் பிள்ளைகளை அடித்து வளர்க்கும் பெற்றோர் இருக்கிறார்கள் என்ராலும் அத்தகைய பெற்றோர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது என்பதே யதார்த்தம்.
'முருங்கையை ஒடித்து வளர்க்கணும், பிள்ளையை அடித்து வளர்க்கணும்' என்ற சொல்லாடலை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அடித்து வளர்த்தால்தான் பிள்ளைகள் உருப்படுவார்கள் என்னும் எண்ணம் காலாவதியாகி விட்டது. ஆனால், இளம் தலைமுறையினரின் வளர்ச்சி, அவர்களுடைய கல்வி, குணநலன்கள் ஆகியவை மீது அன்பும் அக்கறையும் கொண்டு ஓரளவு தண்டிப்பது அவசியம் என்று பலரும் கருதுகிறார்கள்.
ஆனால், இந்தத் தண்டனையின் எல்லை என்ன என்பதில்தான் சிக்கல். தண்டனையின் அளவு என்பது ஒருவருக்கொருவர் மாறுபடக்கூடியது என்பதால் பொதுவான அளவுகோல்களைச் சட்டத்தின் மூலம் முன்வைக்க வேண்டியிருக்கிறது.
ஒரு சில ஆசிரியர் செய்த தவறின் காரணமாக ஒட்டுமொத்த ஆசிரியர் இனத்தையே கண்டிக்கக்கூடாது என உத்தரவிடுவது எந்த விதத்தில் நியாயம்?
பள்ளிக்கு செல்லும் மாணவருக்கு ஒரு சில ஒழுக்கம் அவசியமாகிறது. ஒழுக்கம் என்பது இருந்தால், கல்வி என்பது தானாக வரும். கற்பித்தலை மட்டுமே தலையாய கடமையாக கொண்டு ஒழுக்கத்தை கை விட்டால் நாளைய சமுதாயம் என்னவாகும்? இது சமூகம் சார்ந்த பிரச்னை. தலைமுடியை தாறுமாறாக வெட்டிக்கொண்டு பள்ளிக்கு வரும் மாணவனை ஆசிரியர் கண்டிக்கக் கூடாது என்றால், அதனை அனுமதித்த பெற்றோரின் மனோபாவம் தான் என்ன? தன் செல்ல மகன் எப்படி வேண்டுமானாலும் பள்ளிக்கு வருவான், அவனை கண்டிக்க யாருக்கும் உரிமை இல்லை என்ற மனோபாவம் தானே? கணுக்காலுக்கு மேலே காற்சட்டை அணிந்து பள்ளிக்கு வந்தால் அவனை கண்டிக்க ஆசிரியருக்கு உரிமை இல்லையா?
பெற்றோர்களே! உங்கள் பிள்ளை எது மாதிரி வேண்டுமானால் உடை அணியட்டும். அது உங்கள் வீட்டில் இருக்கட்டும். ஆனால், பள்ளியில் சீருடை என்பது அனைவருக்கும் பொதுவானது. சீருடை இது போல் தான் இருக்க வேண்டும் என்பதும் கட்டாயம். ஆனால், உங்கள் மகன் தன் இஷ்டம் போல் உடையை தைத்து பள்ளிக்கு வந்தால், அதனை கண்டிக்க வேண்டிய முதல் நபர் நீங்கள் தான். உங்களுக்கு இருப்பது சமுதாய கடமை. உங்களுக்கு அந்த பொறுப்பில்லையா?
கண்டித்தல், தண்டித்தல் என்பவற்றை அறவே நீக்கிவிட முடியாது. சட்டமும் அதைச் சொல்லவில்லை. ராணுவத்தில் தவறுகளுக்கு அளிக்கப்படும் தண்டனைகள் அதிகமாக இருக்கும். அந்த தண்டனையானது, தவறு செய்ததற்கு மட்டுமல்ல, தவறு செய்யும் எண்ணம் தோன்றியதற்கும் சேர்த்து தான். தண்டனைக்கு பிறகு தவறு செய்யும் எண்ணமே எழாது.
தவறு செய்தால் கண்டிக்கவும், தப்பு செய்தால் தண்டிக்கவும் ஆசிரியர்களுக்கு உரிமை இருக்க வேண்டும். வன்முறை தவிர்த்த தண்டனைகள், மாணவர்கள் தவறான வழியில் செல்லாமல் தடுக்கும் வழிமுறைகள், அப்படிச் செல்பவர்களை மீட்டுக் கொண்டுவருவதற்கான சரியான வழிமுறைகள் ஆகியவற்றை கல்விக்கூடங்களில் உருவாக்குவதில் மட்டுமே இதற்கான தீர்வு இல்லை.
பெற்றோர்களாகிய நீங்கள் உங்கள் மகனை கண்டித்து வளர்ப்பதிலும் இருக்கிறது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu