தன்னம்பிக்கை, விடா முயற்சி இருந்தால் மாணவர்கள் சாதிக்க முடியும்: இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்
கோப்புப்படம்
கல்லூரி கனவு தூத்துக்குடி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு என்னும் பிளஸ்-2 மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். கனிமொழி எம்.பி. நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏ.க்கள் சண்முகையா, மார்க்கண்டேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி வரவேற்று பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் கலந்து கொண்டு பேசுகையில்: ஒவ்வொரு மாணவர்கள் வாழ்க்கையிலும் பள்ளி பருவம், கல்லூரி பருவம், வேலை வாய்ப்பு, வழிநடத்தும் பருவம் ஆகிய 3 பருவங்கள் உள்ளன. இதில் 3-வது பருவம் மிக முக்கியமானது.
2-வது பருவத்தை எப்படி எதிர்கொள்கிறீர்களோ அதனை பொறுத்தே இந்த 3-வது பருவம் அமையும். அதே நேரத்தில் ஒரு நாட்டின் முன்னேற்றம் இளைஞர்கள் கையில்தான் உள்ளது. இதனை மனதில் கொண்டுதான் தமிழக முதல்வர் 'நான் முதல்வன்' திட்டத்தை தொடங்கி கல்லூரி கனவு திட்டத்தை தொடங்கி உள்ளார்.
மாணவர்களின் வெற்றிக்கு பின்புலம் ஒரு காரணம் கிடையாது. நாம் எதிர்பார்க்கும் படிப்பு கிடைக்கவில்லை என்றாலும், கிடைத்ததை நல்லபடியாக விரும்பி படிக்க வேண்டும். என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை இருந்தால்தான் சாதிக்க முடியும்.
தளராத கடின முயற்சி, விடா முயற்சி இருந்தால் சாதிக்க முடியும். குழந்தைகளிடம் பெற்றோர்கள் தங்கள் எண்ணத்தை திணிக்க கூடாது.
மாணவர்கள் தாழ்வு மனப்பான்மையை விட்டு விட வேண்டும், நீங்கள் யாரையும் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டாம். உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடாதீர்கள்.
உயர்கல்வி முடிக்கும் ஒவ்வொரு மாணவரும் வேலை தேடுபவராக இருக்க கூடாது. வேலை கொடுப்பவராக இருக்க வேண்டும் என்று பிரதமர், முதல்-அமைச்சர் தெரிவித்து வருகின்றனர்.
நீங்கள் சுயமாக தொழிற்சாலைகள் தொடங்க வேண்டும். இங்கு உள்ள 1400 பேரும் 5 ஆண்டுக்கு பிறகு 1400 தொழிற்சாலைகள் தொடங்கி அதனை திறக்க என்னை அழைக்க வேண்டும் என்று கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu