பாக்கெட் உணவு பொருட்களுக்கு கடும் கட்டுப்பாடு: இன்று முதல் அமல்
பாக்கெட் செய்யப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்பவர்களும், இறக்குமதி செய்பவர்களுடன் விலைப்பட்டியலில் ஒட்டு மொத்த விலையுடன் ஒரு கிலோ அல்லது ஒரு லிட்டர் விலையையும் குறிப்பிட வேண்டும். இந்த புதிய நடைமுறையை மத்திய அரசு இன்று முதல் அமல்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே இந்த நடைமுறை பலமுறை தள்ளி வைக்கப்பட்டது. இன்று முதல் அது நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி ஒரு கிலோவிற்கும் அதிகமான எடை கொண்ட பாக்கெட் செய்யப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் மற்றும் இறக்குமதி செய்யும் நிறுவனங்கள், அதிகபட்ச சில்லறை விலையுடன், ஒரு கிலோவிற்கு 'யூனிட் விற்பனை விலை' என்ன என்பதை அச்சிட வேண்டும்.
அதே போல ஒரு லிட்டருக்கு மேல் அளவு கொண்ட பொருட்களை உற்பத்தி செய்யும் போது அதற்கு அதிக பட்ச சில்லறை விலையுடன் ஒரு லிட்டருக்கு யூனிட் விற்பனை விலை என்ன என்பதையும் குறிப்பிட வேண்டும். உதாரணமாக 5 கிலோ பாக்கெட் கோதுமை மாவு பாக்கெட்டில் மொத்த விலையுடன், ஒரு கிலோவின் விற்பனை விலையும் இடம்பெற வேண்டும்.
அதேபோல் ஒரு கிலோவிற்கும் குறைவான பாக்கெட் செய்யப்பட்ட உணவு பொருளுக்கு அதன் மொத்த விலையுடன், ஒரு கிராம் விற்பனை விலையும் இடம்பெற வேண்டும். ஒரு லிட்டருக்கும் குறைவான பாக்கெட் செய்யப்பட்ட பொருளுக்கு ஒரு மில்லி லிட்டர் விலையையும் குறிப்பிட வேண்டும். ஒரு மீட்டருக்கு மேல் அளவு கொண்ட பொருளுக்கு ஒரு மீட்டருக்கான விலையையும், ஒரு மீட்டருக்கு குறைவான அளவு கொண்ட பொருளுக்கு ஒரு செ.மீ. விலையையும் குறிப்பிட வேண்டும்.
பேனா மற்றும் பென்சில்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையை கொண்ட பாக்கெட்டுகளில் ஒரு பென்சில் அல்லது பேனாவின் யூனிட் விலையை குறிப்பிட வேண்டும்.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த புதிய நடைமுறையால் பொருட்களை வாங்குபவர்கள் சரியான முறையில் தேர்ந்தெடுத்து பொருட்களை வாங்க முடியும். இன்று முதல் இந்த புதிய நடைமுறை கட்டாயமாகிறது. இந்த விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.
பால், டீ, பிஸ்கட், சமையல் எண்ணெய், கோதுமை மாவு, குளிர்பானம், குடிநீர், குழந்தைகளுக்கான உணவு, பருப்பு வகைகள், தானியங்கள், சிமெண்ட் பை, பிரட் உள்ளிட்ட 19 வகையான பொருட்களை பேக்கேஜிங் செய்வதற்கான 'குறிப்பிட்ட அளவு' என்ற விதிமுறைகளும் நீக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் உற்பத்தியாளர்கள் சந்தையில் விற்கும் அனைத்து பாக்கெட் செய்யப்பட்ட பொருட்களின் அளவை தீர்மானிக்க முழு சுதந்திரம் உள்ளது. அனைத்து அளவுகளிலும் பாக்கெட் செய்யப்பட்ட பொருட்கள் கிடைப்பதால் நுகர்வோர் தங்களுக்கு தேவையா னதை தேர்வு செய்து வாங்கலாம் என்று கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu