ஆளுநர் மீது கற்கள் வீசப்பட்டதா? தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முதல்வர் விளக்கம்
ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தின்போது எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான விவாதம் குறித்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விளக்கம் அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:
ஆளுநர் அவர்கள் தருமபுரம் ஆதீனம் அவர்களைச் சந்திக்க திருக்கடையூர் கோயிலில் இருந்து புறப்பட்டுச் சென்றபோது, அவருடைய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்றிருக்கக்கூடிய போராட்டத்திற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கூடுதல் டி.ஜி.பி. (சட்டம் - ஒழுங்கு) அவர்கள் நேற்றையதினம் தெளிவாக ஓர் அறிக்கையைக் கொடுத்திருக்கிறார். இருந்தாலும் காவல் துறையின் கூடுதல் இயக்குநர் முக்கியமாகக் குறிப்பிட்டிருக்கக்கூடிய ஒன்றை நான் இந்த அவையில் பதிவு செய்ய விரும்புகிறேன்
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆளுநர் அவர்களுடைய கான்வாய் மீது கற்கள், கொடிகள் வீசியதாகக் கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. காவல் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைத் தடுப்புகள் அமைத்து, கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். பின்னர். அவர்களைக் கைது செய்து வாகனங்களில் ஏற்றினர். வாக்குவாதம் செய்து, பிளாஸ்டிக் பைப்புகளில் கட்டப்பட்டிருந்த கொடிகளை வீசி எறிந்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை ' என்பதை காவல் துறை கூடுதல் இயக்குநர் மிகத் தெளிவாக, மிக விளக்கமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
அதேபோல, A.D.C. to the Hon'ble Governor of Tamil Nadu அவர்கள் ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார். Official- ஆக அவர் நம்முடைய Director General of Police (DGP)- க்கு ஒரு கடிதத்தை அனுப்பி வைத்திருக்கிறார். அதிலே அவர் கடைசியாகக் குறிப்பிட்டிருப்பது "fortunately. Hon'ble Governor and the convoy passed unarmed".அதாவது, மாண்புமிகு ஆளுநர் மற்றும் அவரது பாதுகாப்பு வாகனங்கள் கற்களோ, கொடிகளோ மற்றும் எந்தப் பொருட்களாலும் பாதிக்கப்படாமல் காவல் துறையால் பாதுகாக்கப்பட்டன என்ற செய்தியை ஆளுநர் அவர்களுடைய பாதுகாப்பு அதிகாரி, காவல் துறை இயக்குநருக்குக் கடிதம் மூலம் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்.
ஆனால், இதுதான் நமக்கு chance; இதை அரசியலுக்காக நாம் பயன்படுத்திட வேண்டும் என்று நினைத்திருக்கிறார்கள். இது அரசியல் கட்சிகளுக்கு சாதாரணமாக இருக்கக்கூடிய இயல்புதான். பொதுவாக அ.தி.மு.க.- விலே இருக்கக்கூடிய அந்த ஒருங்கிணைப்பாளர்கள் இரண்டு பேரும் திட்டமிட்டு சேர்ந்துதான் அறிக்கை கொடுப்பார்கள் இங்கேயிருக்கக்கூடிய எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆகிய இரண்டு பேரும் சேர்ந்துதான் அறிக்கை கொடுப்பார்கள்.
ஆனால், இந்த அறிக்கை மட்டும் தனித்தனியாக வந்தது. அப்பொழுதே நீங்கள் புரிந்து கொள்ளலாம். அதிலே குறிப்பாக, எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர் அவருடைய அறிக்கையிலே கடைசியாக 'தமிழக ஆளுநர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு காவல் துறையைத் தனது கையில் வைத்திருக்கக்கூடிய இந்த விடியா அரசினுடைய முதலமைச்சர் என்ன பதில் சொல்லப் போகிறார்' என்று சொல்லிவிட்டு, இப்போது பதிலைக் கேட்காமலேயே போய்விட்டார். அதுதான் எனக்கு வருத்தமாக இருக்கிறது. அதேபோல, எதிர்க்கட்சியினுடைய துணைத் தலைவர் தனியாக ஓர் அறிக்கையைக் கொடுத்திருக்கிறார். அவர் கடைசியாகச் சொல்வது இன்னும் soft- ஆகச் சொல்லியிருக்கிறார். மேற்படி வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் காவல் துறை உடனடியாகக் கண்டறிந்து அவர்களைச் சட்டத்தின்முன் நிறுத்தி, உரிய தண்டனையைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என்று சொல்லியிருக்கிறார். இது நியாயமாக இருக்கிறது.
அங்கே போராட்டம் நடத்தியவர்கள் மீது உரிய வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது; சட்டப்பூர்வ நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. ஆளுநரின் பாதுகாப்பிற்காக மத்திய மண்டலக் காவல் துறைத் தலைவராக இருக்கக்கூடிய ஐ.ஜி. தலைமையில் இரண்டு டி.ஐ.ஜி.-க்கள், 6 எஸ்.பி.- க்கள், 6 கூடுதல் எஸ்.பி.-க்கள், 21 டி.எஸ்.பி. - க்கள், 54 ஆய்வாளர்கள், 102 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 1,120 காவலர்கள் பயன்படுத்தப்பட்டு, அவருடைய பயணம் பாதுகாப்பாக இருந்தது என்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
"ஆர்ப்பாட்டத்தில் ஆளுநரின் கான்வாய் மீது கற்கள் வீசப்பட்டன கொடிகள் வீசப்பட்டன" என்பது ஓர் அபாண்டமான குற்றச்சாட்டு. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல் துறையினர் தடுப்புகள் அமைத்து, கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தனர் என்பதுதான் உண்மை.
ஜனநாயக ரீதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினாலும், ஆளுநர் அவர்களுடைய பாதுகாப்பில் இந்த அரசு உரிய நடவடிக்கைகளை முறையாக எடுத்திருக்கிறது. ஆளுநருக்கு உரிய பாதுகாப்பினை அளிப்பதில் இந்த அரசு எந்த சமரசமும் செய்து கொள்ளாது என்பதை நான் உறுதியோடு இந்த அவையிலே பதிவு செய்ய விரும்புகிறேன்.
இந்த நிகழ்வை வைத்துக்கொண்டு, ஆளுநரைப் பயன்படுத்தி அரசியல் செய்யலாம் என எதிர்க்கட்சித் தலைவரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் எண்ணுகிறார்கள். நான் உறுதியாகச் சொல்கிறேன் அது நடக்கவே நடக்காது, இது தி.மு.க. ஆட்சி. சாத்தான்குளத்திலே நடைபெற்ற சம்பவம் குறித்து இன்றைக்கும் பேசிக் கொண்டிருக்கிறோம். அதேபோல, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைப் போராட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம். அந்தச் சம்பவத்தைப் பற்றி அன்றைக்கு முதலமைச்சராக இருந்தவரிடம் கேட்டபோது எனக்குத் தெரியவில்லையே என்று சொன்னார். அப்படிச் சொன்னவர்தான் இவர். ஆனால், இன்றைக்கு இவர் சட்டம் - ஒழுங்கைப் பற்றிப் பேசுவதுதான் வேடிக்கையாக இருக்கின்றது.
அ.தி.மு.க. ஆட்சியில் ஆளுநராக இருந்த மறைந்த சென்னா ரெட்டி அவர்களுக்கு என்ன நடந்தது? நான் அதற்குள் அதிகம் போக விரும்பவில்லை . திண்டிவனத்தில் 10-4-1995 அன்று ஆளுநர் சென்னாரெட்டியும், அவரது கான்வாயும் 15 நிமிடங்களுக்கு மேல் அங்கே மறிக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் நடுரோட்டில் நின்றது யாருடைய ஆட்சியில்? அ.தி.மு.க. எம்.எல்.ஏ - க்கள் 4 பேர் தலைமையில் சரமாரியாக கல் எறிந்திருக்கிறார்கள், முட்டையை வீசியிருக்கிறார்கள் தக்காளியை வீசி அவமானப்படுத்தியிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், சென்னா ரெட்டி உயிர் தப்பினார்" என்று அன்றைக்குத் தலைப்புச் செய்தியாக பத்திரிகைகளில் வந்தது. இது யாருடைய ஆட்சியில்? தாக்குதலுக்கு உள்ளான ஆளுநரைத் திரும்பப் பெறவேண்டும் என்று இதே அவையில், அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு தனித் தீர்மானமே கொண்டு வரப்பட்டது என்று இங்கே திரு. கு. செல்வப் பெருந்தகை அவர்கள் குறிப்பிட்டுச் சொன்னார்கள். நாவலர் அவர்கள்தான் அந்தத் தீர்மானத்தை
முன்மொழிந்து, அது இந்த அவையிலே நிறைவேற்றப்பட்டது என்பதும் உங்களுக்குத் தெரியும். ஆகையால், 'சென்னாரெட்டி உயிர் தப்பினார்' என தலைப்புச் செய்தி பத்திரிகைகளில் எல்லாம் வந்தது. தாக்குதலுக்கு உள்ளான ஆளுநர் அவர்களைத் திரும்பப் பெற வேண்டுமென்று 26-4-1995 அன்று இதே சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தது யாருடைய ஆட்சியில்?
ஆளுநர் மட்டுமல்ல; மிகப் பெரிய சட்டப் பதவியில் இருந்த தலைமைத் தேர்தல் ஆணையர் மறைந்த டி.என். சேஷன் அவர்கள் தாஜ் ஓட்டலிலிருந்து வெளியே வரவே முடியவில்லை. அதெல்லாம் அ.தி.மு.க. ஆட்சியினுடைய சாதனைகள். விமான நிலையத்திலிருந்து விரட்டியடித்து, அவர் சென்னையில் இருக்கக்கூடிய தாஜ் கோரமண்டல் ஓட்டலுக்கு வந்த பிறகு, அந்த ஓட்டலையும் முற்றுகையிட்டு, கல்வீசித் தாக்குதல் நடத்தியது யாருடைய ஆட்சியில்? அவர்கள் ஆட்சியில்தான்.
ஏன் இன்றைக்கு பா.ஜ.க. - வில் ஒரு முக்கியஸ்தராக இருக்கக்கூடிய டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி அவர்களை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே சென்று தாக்குதல் நடத்த முயன்று, அவரை அசிங்கப்படுத்திய ஆட்சி உங்களுடைய ஆட்சி, அ.தி.மு.க. ஆட்சி. எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி; சந்திரலேகா அவர்கள் மீது ஆசிட் வீசிய ஆட்சி, யாருடைய ஆட்சி? எல்லாம் அ.தி.மு.க. ஆட்சியில்தான் நடைபெற்றன.
எனவே, இந்த அரசைப் பொறுத்தவரையில், நான் தெளிவாக உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன். காவல் துறை ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களைத் தடுத்திருக்கிறது. ஆளுநர் அவர்கள் மீது ஒரு தூசு கூட விழாதவாறு மிகவும் பாதுகாப்பாக அழைத்துச் சென்றிருக்கிறது. அதுமட்டுமல்ல; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு, விசாரணையும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆகவே, அரசியல் சட்டப் பதவிகளில் இருப்பவர்களைக் காப்பாற்ற, அவர்களுக்குரிய பாதுகாப்பினை அளித்திட, இந்த அரசுக்குப் பொறுப்பு இருக்கிறது. அந்தக் கடமையைக் காவல் துறை செவ்வனே நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.
ஆகவே, தங்கள் ஆட்சியில் ஆளுநரை கல், முட்டை, தக்காளி என வீசித் தாக்கியதை எல்லாம் மனதில் வைத்து கொண்டு, நடக்காத ஒன்றை நடந்ததாகக் கற்பனையாக இங்கே கூறி அரசியல் செய்ய வேண்டாம் என்று இங்கேயிருந்து வெளிநடப்பு செய்திருந்தாலும், அவர்களுக்கு இந்தச் செய்தி போகும் என்ற காரணத்தினால் - எதிர்க்கட்சித் தலைவர் அவர்களையும், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அவர்களையும் நான் மிகுந்த மரியாதையோடும், மதிப்போடும் கேட்டுக் கொள்கிறேன். என்று முதலமைச்சர் விளக்கம் அளித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu