இன்றைய சிந்தனை.( 07.04.2022) மனிதநேயத்தை விதைப்போம்.

"இன்றைய சிந்தனை".( 07.04.2022) ''மனிதநேயத்தை விதைப்போம்...!"
ஒரு மனிதன் அறிவாளியாக இருக்கலாம். ஆளுமை உடையவனாக இருக்கலாம். அதிகாரம் படைத்தவனாக இருக்கலாம்.
எல்லாம் இருந்தும் அவனிடம் மனித நேயம் இல்லா விட்டால் தான் நினைத்த எதையும் அவனால் சாதிக்க இயலாது.
பல ஆயிரம் ஆண்டுகளாக மனித நேய மாண்புடன் வாழ்ந்த புனிதர்கள் நிறைந்த பூமி நமது பூமி. உயர்வான ஒழுக்கம், உன்னதமான பண்பாடு, அவலக்குரல் கேட்டால் துடித்து எழும் மனித நேயம்,
அத்தனை நற்பண்புகளோடும் உலகம் வியக்கும் வாழ்க்கை வாழ்ந்து மனித குலம் செழிக்க வழி காட்டினார்கள் நம் முன்னோர்கள். ஈ, எறும்பு, புழு, பூச்சி, வண்டு, பறவை, விலங்குகள் கூட துன்பப்படக் கூடாது என்ற எண்ணம் அவர்களது மனதில் மேலோங்கி இருந்தது.
இன்றைய மனிதனின் மனித நேயத்தின் நிலை என்ன?. மனிதனை மனிதன் மதிப்பது இல்லை. அரவணைப்பது இல்லை. மனிதனுக்கு மனிதன் அன்பு காட்டுவதும் இல்லை. மனித நேயம் கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் புதைந்து கொண்டு இருக்கிறது.
சாதி, மதம், இனம், மொழி, நாடு கடந்து, உயர்ந்தவன், தாழ்ந்தவன் பாகுபாடு மறந்து, விருப்பு வெறுப்பற்று, ஒன்றே குலம் ஒருவனே தேவன், எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்ற மனித நேய சிந்தனையோடு பவனிக்கும் மனிதர்களை இன்று தேடித்தான் கண்டு பிடிக்க வேண்டியுள்ளது.
நாம் உலகில் வாழ்வது ஒரு முறை. அவ் வாழ்வு பிறருக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும். சக மனிதனிடம் அன்பு காட்டுவது, அவனைத் தன்னைப்போல மதிப்பது, எல்லைகள் கடந்து ஏழைகளுக்கு இரங்குவது, பசிப்பிணி நீக்கி அவர்களை வாழ வைப்பதை போன்ற சமுதாய கடமைகளில் நாம் ஒவ்வொருவரும் நம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை இன்று உருவாகி உள்ளது.
ஆம்.,நண்பர்களே...!
உலகில் வன்முறைகளும்கலவரங்களும் அழிந்து அனேக அன்பும், அமைதியும், ஆனந்தமும் நிலைத்து நீடித்திருக்க மனித நேயத்தை விதைத்துக் கொண்டே இருப்போம்! உலகெங்கும் அன்பும், அமைதியும் மலரட்டும்...
- உடுமலை சு.தண்டபாணி✒️
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu